'இந்தியாவில் பேட்டிங் செய்வது கடினம்': கேப்டன் ரோகித் சர்மா

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கடந்த 10 வருடங்களாக எந்தவித ஐசிசி கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இன்று முதல் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் தற்போது வெளிநாடுகளை விட இந்தியாவில் தான் பேட்டிங்கிற்கு அதிக சவாலான மைதானங்கள் இருப்பதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்திய மண்ணில் என்னுடைய சமீபத்திய டெஸ்ட் இன்னிங்ஸ்களை பாருங்கள். அதாவது வெளிநாடுகளை விட கடந்த 2 – 3 வருடங்களாக இந்தியாவில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகியுள்ளது என்று நான் சொல்ல வருகிறேன். குறிப்பாக இந்தியாவில் இப்போதுள்ள பிட்ச்கள் வெளிநாடுகளை விட சவாலாக இருக்கின்றன. அதனால் தான் நாங்கள் தனி நபர் வீரர்களின் பேட்டிங் சராசரி பற்றி பேசுவதில்லை.

மாறாக சவாலான மைதானங்களில் சிறப்பாக விளையாடுவோம் என்று அனைவரும் முடிவெடுத்துள்ளோம். அதனால் எங்களுடைய கேரியரின் முடிவில் இருக்கப் போகும் பேட்டிங் சராசரியை பற்றி கவலைப்பட போவதில்லை. மேலும் ஒவ்வொரு வீரர்களிடமும் இருக்கும் வித்தியாசமான அணுகுமுறையும் நான் மாற்ற விரும்பவில்லை. அந்த வகையில் தற்சமயத்தில் அடுத்த 5 – 6 மாதங்களில் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைக்காமல் இப்போது சிறப்பாக செயல்படுவதையே நான் யோசிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.