“பெரும் பணக்காரர்களுக்காகவே மோடி அரசு செயல்படுகிறது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மைசூரு: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கர்நாடக அரசின் கிரஹ லக்‌ஷ்மி திட்டம் மைசூருவில் இன்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில், கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர் விழாவில் பேசிய ராகுல் காந்தி, “கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கிரஹ ஜோதி திட்டம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரஹ லக்ஷ்மி திட்டம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் அன்ன பாக்யா திட்டம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், வேலையில்லா பட்டயப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500-ம் 2 ஆண்டுகளுக்கு வழங்கும் யுவ நிதி திட்டம், பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் உசித பிரயாணா ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.

நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி தற்போது கிரஹ லக்‌ஷ்மி திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கனிணியில் ஒரே ஒரு கிளிக் செய்ததன் மூலம் கோடிக்கணக்கான பெண்களின் வங்கிக் கணக்குகளில் பணம் சென்று சேர்ந்துள்ளது. இதேபோல், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான் இந்திய ஒற்றுமை யாத்திரை சென்றபோது, கர்நாடகாவில் 600 கிலோ மீட்டர் தூரம் பயணித்தேன். அப்போது விலைவாசி உயர்வால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக ஆயிரக்கணக்கான பெண்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களால் தாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்வு உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. இதைக் கருத்தில் கொண்டே காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது.

நாங்கள் கொடுத்த இந்த 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் பெண்களுக்கானவை. ஏழைகளின் சிரமங்களை அறிந்து காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் செயல்பட்டு வருகிறது. ஆனால், மத்தியில் உள்ள அரசு பெரும் பணக்காரர்களுக்காகவே பணியாற்றுகிறது. ஏழைகளுக்காகவும், பலவீனமானவர்களுக்காகவும் அரசு செயல்பட வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான அரசு அப்படி அல்ல” எனத் தெரிவித்தார்.

கிரஹ லக்‌ஷ்மி திட்டத்தின் மூலம் கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 1.28 கோடி பெண்கள் மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி தேவை. இந்த 5 திட்டங்களையும் நிறைவேற்றும் ஆற்றல் கர்நாடக அரசுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.