இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்த சூழலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அவர் பிரதமர் பதவியை இழந்தார். அதனை தொடர்ந்து ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த வகையில் இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலமான தோஷகானாவில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
3 ஆண்டுகள் சிறை
தோஷகானா வழக்கு என்று அழைக்கப்படும் இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட செசன்சு கோர்ட்டு இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 5-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தீர்ப்பை தொடர்ந்து, இம்ரான்கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே தோஷகானா வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஆமெர் பரூக், நீதிபதி தாரிக் மெகமூத் ஜஹாங்கிரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தனர்.
அதன்படி இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட செசன்சு கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இம்ரான்கானை உடனடியாக விடுவிக்குமாறு சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த சூழலில் அடுத்த சில மணிநேரத்தில் இம்ரான்கான் இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்னதாக இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது முக்கிய மீட்டிங், அரசு உயரதிகாரிகளுடன் பேசும் சைபர் (Cypher) கேபிள் சேவையை தனது சொந்த கட்சி மாநாட்டில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அவரை சிறையில் இருந்து விடுவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை அவர் சைபர் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சைபர் வழக்கின் விசாரணையை ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளதால், இம்ரான் கானின் சிறைதண்டனை தொடருகிறது. பாகிஸ்தானில் அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.