சிஏஜி அறிக்கை : பாஜகவின் பிரமாண்ட ஊழல் – கட்கரியை பலிகடாவாக்க முயல்கிறதா மோடி அரசு?

மத்திய அரசின் சாலை போக்குவரத்து, ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட 7 திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்ட, நாடு முழுவதும் விவாதப் பொருளானது.

விவாதமான சிஏஜி அறிக்கை

குறிப்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மேற்கொண்ட திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சிஏஜி வெளியிட்ட அறிக்கை முக்கியமானதாக மாறியது. இதனை முன்வைத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் பாஜகவின் மூத்த தலைவரான நிதின் கட்கரி. இதன்மூலம் நிதின் கட்கரியை ஓரம்கட்ட மோடி தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் பாஜக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் முக்கிய தலைவர் நிதின் கட்கரி

ஏனெனில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே பாஜகவுக்கு தேசியத் தலைவராகவும், கட்சியின் முக்கியமான சக்தியாகவும் விளங்கியவர் நிதின் கட்கரி. மோடி பிரதமரான பிறகு அமித்ஷாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. மூத்த தலைவர்கள் பலரும் ஓரம்கட்டப்பட்டனர். அவர்களில் நிதின் கட்கரி முதன்மையானவர். எனினும், ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூர் எம்.பி என்பதாலும் ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம் இவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாகவும் மத்திய அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.

ஒரு வீடியோவில் மோடி மேடைக்கு வர அனைவரும் எழுந்து நின்று வரவேற்ற நிலையில் நிதின் கட்கரி மட்டும் கண்டுகொள்ளாமல் நின்றிருந்தார். இதனால் நிதின் கட்கரிக்கும் மோடிக்கும் சுமுகமான நட்பு இல்லை என்று பாஜக வட்டாரங்களிலேயே பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள சிஏஜி அறிக்கை மத்திய அரசுக்கு எதிர்மறை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓரம்கட்டப்படும் நிதின் கட்கரி

அதே சமயம் இதே காரணத்தை வைத்து நிதின் கட்கரியை ஓரம்கட்டத் தயாராகிறது மோடி தரப்பு. அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், நிதின் கட்கரி மீதான குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி அவருக்கு சீட் மறுக்கப்படலாம், ஒரு வேளை சீட் வழங்கப்பட்டாலும் பொறுப்பு எதுவும் வழங்காமல் ஓரம்கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளது மோடி தரப்பு என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரங்களில்.

ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ், சிவசேனா

இந்த விவகாரத்தில் கட்கரிக்கு ஆதரவாக காங்கிரஸும், சிவசேனாவும் இணைந்துள்ளது. காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜய் வடேட்டிவார், சிஏஜி அறிக்கையை பயன்படுத்தி நிதின் கட்கரியை அவதூறு செய்யும் சூழ்ச்சி நடைபெறுகிறது என்று கூறினார்.

இதேபோல சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “நிதின் கட்கரி ஒரு திறமையான அமைச்சர். அவர் நாட்டின் முக்கியமான தலைவரும் கூட. அவர் ஆற்றிய பணிகளை நாடு முழுவதும் நாம் காணலாம். அவர் நாட்டின் எதிர்கால தலைவராக உருவாகக் கூடியவர். தங்கள் வழியில் வருபவர்களை அப்புறப்படுத்த அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பாஜக வைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நாம் அனைவருமே இந்த சதியால் பாதிக்கப்பட்டவர்கள்தான்” என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.