சென்னை:
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் திமுகவினர் சிலர் பணம் கேட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழக அரசை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஒரு ஐஏஎஸ் அதிகாரியே கட்சிக்காரர்களால் மிரட்டப்படுகிறார்கள் என்றால் பொதுமக்களின் நிலைமை என்னவாகும்?” எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் டவர் பார்க் பூங்காவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அங்கிருந்த திமுகவினர் சிலர், “தொகுதி எம்எல்ஏவுக்கும், கவுன்சிலருக்கும் கூட சொல்லாமல் நிகழ்ச்சி நடத்தினால் எப்படி?” எனக் கேள்வியெழுப்பினர். மேலும், கண்காட்சியில் உள்ள ஒவ்வொரு ஸ்டாலுக்கும் ரூ.2000 தர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டதாக தெரிகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அந்தப் பணத்தை தானே தந்துவிடுவதாகவும், இனி அண்ணாநகர் டவர் பார்க் பூங்காவில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது எனவும் கோபமாக கூறினார். பின்னர் அங்கிருந்து செல்ல முயன்ற ராதாகிருஷ்ணனை கட்சியினர் சிலர் பின்தொடர்ந்து வந்து ஏதோ பேசியபடி வந்தனர். இதனால் கோபம் அடைந்த ராதாகிருஷ்ணன், “இங்க பாருங்க.. நீங்க எங்கெங்கே எவ்வளவு வசூல் பண்றீங்கனு எனக்கு தெரியும். இதெல்லாம் லைவ் டிவியில் சொல்லிடுவேன்” எனக் கூறியதால் அவர்கள் அமைதியாகினர்.
இதனிடையே, இந்த வீடியோ ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தீயாக பரவி பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது:
ராதாகிருஷ்ணனை பொறுத்தவரை அவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி. நேர்மையான அதிகாரி. அவரிடம் போய் சாதாரண கவுன்சிலரின் கைத்தடிகள் எவ்வளவு அலம்பல் செய்தார்கள் என்பதை ஊடகங்களில் பாத்திருப்போம். ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கே திமுக ஆட்சியில் மதிப்பு கிடையாது என்றால் சாதாரண மக்களின் நிலைமையை நாம் யோசித்து பார்க்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிக்குதான் இந்த நிலைமை என்று பார்த்தால் காவல்துறை அதிகாரிகள் ரோட்டில் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு பூந்தமல்லியில் காவலர் ஒருவரை கஞ்சா போதையில் ரவுடிகள் கத்தியை எடுத்து துரத்துகிறார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு வடசென்னையில் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை ரவுடிகள் நடு ரோட்டில் வைத்து அடித்திருக்கிறார்கள். இதுதான் இந்த விடியா திமுக ஆட்சியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு நிலைமை. ஏன்டா காக்கி சட்டையை போடுகிறோம் என போலீஸார் வெட்கப்படுகிறார்கள். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.