டெல்லி,
தலைநகர் டெல்லியின் பஜன்புரா பகுதியை சேர்ந்தவர் ஹர்பிரீத் கில் (வயது 36). இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஹர்பிரீத் கில் நேற்று இரவு 11 மணியளவின் தனது உறவினருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சுபாஷ் விஹார் பகுதியில் சென்றபோது அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பைக்கில் சென்றுகொண்டிருந்த ஹர்பிரீத் கில் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உறவினர் மீது குண்டு பாய்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தினர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற 5 பேர் கொண்ட கும்பல் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.