ஆசியக் கோப்பையின் முதல் போட்டியிலேயே அதிரடி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி.
2023-ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்கப் போட்டியில், நேபாளம் அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். சோம்பால் கமி வீசிய முதல் ஓவரிலேயே, அதிரடியாக இரண்டு பவுண்டரிகளை அடித்தனர். ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் நிதானத்தைக் கடைபிடித்து விளையாடியது, இந்த ஜோடி. 5 ஓவர்கள் முடிவில் 21 ரன்களை எடுத்தது, பாகிஸ்தான் அணி.
கிட்டத்தட்ட ஒருநாள் போட்டிக்கான நல்ல தொடக்கம்தான் இது. ஆனால், அடுத்த 6 மற்றும் 7வது ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன. 6வது ஓவரின் போது, ஃபகார் ஜமான் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, அணியின் கேப்டன் பாபர் அசாம் களத்திற்குள் வந்தார். அடுத்த 7வது ஓவரின் போது இமாம் உல் ஹக், ரன்-அவுட் ஆகி வெளியேறினார். 7 ஓவர்கள் முடிவில், 29 ரன்களுக்கு 2 தொடக்க வீரர்களும் ஆட்டமிழந்திருந்தனர். பாகிஸ்தான் அணியின் ஒப்பனிங் சொதப்பினாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வலுவாகக் களத்தில் நின்றுவிட்டனர். அணியின் கேப்டன் பாபர் அசாமும், விக்கெட்கீப்பர் முஹமது ரிஸ்வானும் பொறுமையாக விளையாடி வந்தனர். 12வது ஒவரின் முடிவில் 56 ரன்களைக் கடந்தது பாகிஸ்தான்.
அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இன்னும் வேகம் எடுத்தது. ஆட்டத்தின் தன்மையைப் புரிந்துகொண்ட இவர்களுக்குள் நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகியிருந்தது. ஸ்பின்னர்கள் வீசிய ஓவர்களிலும் ஒன்று, இரண்டு என ரன்கள் வந்தன. இந்நிலையில், 25-வது ஒவரின் முதல் பந்தை எதிர்கொண்ட முஹமது ரிஸ்வான், ரன்-அவுட் ஆகி வெளியேறினார். இவர் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய ஆகா சல்மான் 29வது ஓவரில் அவுட்டாகி, வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். ஒருபுறம், இன்னிங்ஸின் 30வது ஓவரில் அரைசதத்தை நிறைவு செய்தார், பாபர் அசாம்.
இதுவரை தனியாகப் போராடி வந்த பாபருடன், இஃப்திகார் அஹமத் ஜோடி சேர்ந்தார். இவர்களின் பேட்டிங் பசிக்குச் சரியான தீனிப் போடும் வகையில் பந்து வீசிக் கொண்டிருந்தனர், நேபாள் அணியின் பௌலர்கள். அரை சதத்திற்குப் பிறகு, அதிரடியாக இறங்கி விளையாடி வந்தார் பாபர். 40 ஓவர்கள் முடிந்த பிறகு, 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான். அணியின் கேப்டன் பாபர் அசாம், 42வது ஓவரில் சதத்தைக் கடந்தார். இது, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இவர் அடிக்கும் 19வது சதமாகும். 102 இன்னிங்ஸ்களில் விளையாடி 19 சதங்களைப் பதிவு செய்துள்ளார்.
அதுவரை ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தி வந்த நேபாள் பௌலர்களால், இதற்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியவில்லை. சிக்ஸர், பவுண்டரிகளைப் பறக்கவிட்டு வந்த இஃப்திகார் அஹமத், 67 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 129 ரன்கள் கிடைத்தது. சிறப்பாக விளையாடிய பாபர் அசாம், 151 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 342 ரன்களை எடுத்தது, பாகிஸ்தான் அணி. இஃப்திகார் அஹமத் 71 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து களம்கண்ட நேபாள் அணியால், இலக்கில் பாதியைக் கூட எடுக்க முடியவில்லை. முதல் ஓவரிலேயே நேபாள் அணிக்கு பேரிடியாக வந்திறங்கினார், ஷாஹீன் அஃப்ரிடி. இந்த ஓவரில் மட்டும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன. மூன்றாவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட் வீழ்ந்தது. 5 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்தது நேபாள் அணி. அடுத்து களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் சொற்ப ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆரிப் ஷேக் மற்றும் சோம்பால் கமி இருவரும், வலுவிழந்த நேபாள் அணியைச் சரிகட்ட முயற்சி செய்தனர். ஆனால், இவர்களும் பாகிஸ்தான் பௌலர்களின் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆரிப் ஷேக் 26 ரன்களிலும், சோம்பால் கமி 28 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்களிலேயே நேபாள் அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டரும் சரிந்தது. குஷால் மல்லா, 23வது ஓவரில் சிக்ஸரை அடிக்க, 100 ரன்களைக் கடந்தது நேபாள். ஆனால், அடுத்த ஓவரில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நேபாள் அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடித்து வைத்தார், ஷாதப் கான். நேபாள் அணி, 23.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்த வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது பாகிஸ்தானின் முல்தான் மைதானம்.
இந்த ஆட்டத்தில் சில சாதனைகளும் படைக்கப்பட்டன.
* ஆசியக் கோப்பை (50 ஓவர்) வரலாற்றில், அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். 150+ ரன்கள் எடுத்த முதல் கேப்டனும் பாபர்தான். இதற்கு முன்னதாக, விராட் கோலி வங்கதேசத்திற்கு எதிராக 136 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
* ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம்வரும் பாபர் அசாம், ஆசியக் கோப்பை (50 ஓவர்) வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் .
* இஃப்திகார் அஹமது மற்றும் பாபர் அசாம் இருவரும் இணைந்து, 214 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். ஆசியக் கோப்பை (50 ஓவர்) தொடரில், அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் இதுவாகும்.
* விராட் கோலிக்குப் பிறகு, ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் 150+ ரன்களை அடித்த இரண்டாவது வீரர் பாபர் அசாம்தான். 2012-ல், வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி 183 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆட்டம் முடிந்த பிறகு பேசிய பாபர் அசாம், “இந்த போட்டி, இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 100 சதவிகிதம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இதே போன்று, இந்தியாவிற்கு எதிராகவும் விளையாட முடியும் என்று நம்புகிறேன்” எனப் பேசினார்.
வருகின்ற செப்டம்பர் 2-ம் தேதி சனிக்கிழமையன்று, பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் மோதவுள்ளன. முரட்டு ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தான் அணியை, இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே வீழ்த்துமா என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்!