காபோன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம்: வீட்டு காவலில் வைக்கப்பட்டார் அதிபர்| Gabon military seizes power: president placed under house arrest

தக்கார்: காபோன் நாட்டில், அதிபர் தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த அந்நாட்டு ராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய ஆப்ரிக்க நாடான காபோனில், காபோனீஸ் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, அலி போங்கோ ஒண்டிம்பா, 64, என்பவர், 14 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்தார்.

இவரது தந்தை உமர் போங்கோ ஒண்டிம்பா, 41 ஆண்டுகளாக காபோனை ஆட்சி செய்து வந்தார். இவரது மரணத்துக்கு பின், 2009 அக்டோபரில் காபோன் அதிபராக, அலி போங்கோ ஒண்டிம்பாபதவியேற்றார்.

இவரது ஆட்சியில் விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை அதிகரித்ததால், பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

சமீபத்தில், காபோனில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, ‘அதிபர் அலி போங்கோ ஒண்டிம்பா, 64.27 சதவீத ஓட்டுகள் பெற்று மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்’ என, அந்நாட்டு தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகள், முறைகேடு செய்து அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டின.

இந்நிலையில், காபோனில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாகஅந்நாட்டு ராணுவத்தினர் நேற்று அறிவித்தனர்.

இது குறித்து, தொலைக்காட்சி வாயிலாக ராணுவத்தினர் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. அலி போங்கோ ஒண்டிம்பாவிடம் இருந்து அதிபர் பதவி பறிக்கப்பட்டு, அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாட்டில் மீண்டும் அமைதியை மீட்டெடுக்க, ஆட்சி அதிகாரத்தை நாங்கள் கைப்பற்றி உள்ளோம்,

மறு அறிவிப்பு வரும் வரை, நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்படுகின்றன. மேலும், அரசு நிறுவனங்கள் அனைத்தும் கலைக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த அறிவிப்புக்கு பின், தலைநகர் லிப்ரேவில்லேவின் ஒரு சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை, அந்நாட்டு மக்கள் ராணுவத்தினருடன் சேர்ந்து கொண்டாடினர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய ஒரு மாதத்துக்கு பின், அது போன்ற சம்பவம் காபோனில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.