வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய அரசு, காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற காலக்கெடுவை தற்போது கூற முடியாது எனக்கூறியுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில், அரசியல் சாசனத்தில், 370வது பிரிவு சேர்க்கப்பட்டது. கடந்த, 2019ல் இந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான மசோதாக்கள் பார்லிமென்டில் நிறைவேறின. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கால அட்டவணை
இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம்(ஆக.,29) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‛‛ ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது அளிக்கப்படும் என்பது தொடர்பான கால அட்டவணையை இன்று சமர்ப்பிப்பதாக”, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
3 தேர்தல்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். 3 தேர்தல் இன்னும் நடைபெற வேண்டியுள்ளது. முதல்முறையாக மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதலில் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். லே பிராந்திய வளர்ச்சி கவுன்சில் தேர்தலும் மற்றும் கார்கில் பகுதிக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்காலிகமானது
காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்ற காலக்கெடுவை தற்போது கூற முடியாது. ஆனால், யூனியன் பிரதேச அந்தஸ்து என்பது தற்காலிகமானது தான். அங்கு மாநிலம் முழுவீச்சில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. 2019 முதல் 2023 வரை ஒப்பிடுகையில், பயங்கரவாத சம்பவங்கள் 45.2 சதவீதம் குறைந்துள்ளது.
ஊடுருவல் சம்பவம் 90 சதவீதம் குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை 97 சதவீதம் குறைந்துள்ளது. பாதுகாப்பு படையினர் உயிரிழப்பது 65 சதவீதமாக குறைந்துள்ளது . 2018 ல் 1,767 கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. தற்போது அது இல்லை. அதேபோல், ஒருங்கிணைக்கப்பட்ட பந்த்துகள் 2018 ல் 52 நடந்தன. தற்போது முற்றிலும் இல்லை. இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement