பச்சோந்தி போல மாறுறீங்க – ஓபிஎஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கை 11 வருடங்களுக்கு பிறகு மறு ஆய்வு செய்துள்ள நீதிமன்றம், சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிமுக ஆட்சி நடந்த 2001 -2006 காலகட்டத்தில் வருவாய் துறை அமைச்சராகவும், சில வருடங்கள் முதலமைச்சராகவும் இருந்தவர்

. அதன்பிறகு வந்த திமுக அரசு, ஓபிஎஸ் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தது. ஓபிஎஸ் தனது மனைவி, மகன்கள், மகள் மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்தது என தேனி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தேனி, மதுரை நீதிமன்றங்கள் நடந்து வந்த நிலையில் இறுதியாக சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டு ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது, குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மேற்கொண்டு வழக்கை நடத்த விரும்பவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை கூறிவிட்டது. இதனால், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டார்.

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், “2012ல் பிறப்பித்த உத்தரவை தற்போது மறுஆய்வு செய்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்த விவகாரத்தில் குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நடைமுறை இதற்கு முன்பு நடந்ததுண்டா? இப்படியே சென்றால் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்து விடலாம்” என்று காட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து, “ஓபிஎஸுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் சிக்கல்கள் உள்ளன. ஆட்சியாளர்களின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுகிறது. பச்சோந்தி போல கட்சிக்கு ஏற்றபடி தன் வண்ணத்தை மாற்றி செயல்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை அரசில் இருந்து விலகி செயல்பட வேண்டும். ” என்று தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். ஏற்கனவே அதிமுக தொடர்பான வழக்குகளை ஓபிஎஸ் நடத்தி வரும் நிலையில், 11 ஆண்டுகளுக்கு மீண்டும் இவ்வழக்கு விசாரணை நடைபெறுவதால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.