நாட்டில் தாதியர் சேவைக்கு மேலும் 3000 தாதிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற் கு அவசியமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல (29) சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதில் சிக்கல்கள் காணப்படுமாயின் அதற்குப் பொருத்தமான அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இதன்போது ஆலோசனை வழங்கினார்.
சுகாதார அமைச்சரின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை சுட்டிக் காட்டினார்.
அதற்கிணங்க 2018ஆம் ஆண்டில் மாணவத் தாதியர் பயிற்சிக்காக உள்வாங்கப்பட்ட 2500 பெண் தாதியர் மற்றும் 500 பட்டதாரித் தாதியர்கள் நாட்டின் தாதிச் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டது.
அதனிடையே, தாதிப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு 2019/2020 உயர்தரப் பிரிவில் விண்ணப்பங்களைக் கோருவதற்கான் வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதில் தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் மூன்று வருடங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறே கடந்த ஜூலை மாதம் 3315 பேர் தாதிய மாணவர்களுக்கான பயிற்சிக்காக அவர்கள் 2018/2019 வருட உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு இணங்க உள்வாங்கப்பட்டனர். இதற்கிணங்க தற்போது நாட்டில் 6700 தாதிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனாத் தொற்று போன்ற அநர்த்த நிலையில் தாதிகளை உள்வாங்குதில் சில சிக்கல்கள் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் அவ்வாறு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் இதன்போது அலோசனை வழங்கினார்.
விசேடமாக உயர்தரப் பரீட்சையை பூர்த்தி செய்த இவ்வாறான சேவைகளை எதிர்பார்க்கின்ற இளைஞர்கள் பாரிய எதிர்பார்ப்புடன் தொடர்ந்தும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான நிலையைப் புரிந்துகொண்டு, பொருத்தமான அதிகாரிகள் அதற்குச் சாத்தியமான செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே தாதிச் சேவையில் இடமாற்றத்திற்காக முறையான இடமாற்ற விதிகள் பின்பற்றப்படுவதாகவும், பல வருடங்களாக ஒரே வைத்தியசாலையில் பணி புரிபவர்கள் அதனால் அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், எதிர் காலத்தில் குறிப்பிட்ட காலதிற்குள் பூரணப்படுத்திய அதிகாரிகள் முறையான விதிகளின் கீழ் இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்கும் மிகவும் சாத்தியமான படிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இக்கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீசந்திரகுப்தா, மேலதிக செயலாளர் எ. எம். வத்சலா பிரியதர்ஷினி, உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.