மும்பை: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், இண்டியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் கூட்டணிக்கான இலச்சினை (லோகோ) வெளியிடப்படுகிறது. தொகுதி பங்கீடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘தனிப்பட்ட லட்சியங்களுக்காக நான் எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கவில்லை என்றும், இதன்ஒருங்கிணைப்பாளராக வேறு யாரையாவது நியமிக்க விரும்புகிறேன்’’ என்றார்.
பாஜகவும் ஆலோசனை: மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவை தொகுதிகள் குறித்து ஆய்வு செய்ய 2 நாள் கூட்டத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசும் கூட்டியுள்ளது. இந்த கூட்டம் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்தில் இன்றும் மதியம் தொடங்குகிறது. மாநிலத்தில் பல பகுதிகளில் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பான கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
எந்தக் கூட்டணியிலும் இல்லை: தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அல்லது இண்டியா கூட்டணியில் கைகோக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பாஜக தலைமையிலான என்டிஏ மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டியா ஆகிய இரண்டு கூட்டணிகளுமே ஏழைகளுக்கு எதிரானவை. மேலும், சாதியவெறி,வகுப்புவாதம், பணக்காரர்களுக்கு ஆதரவான, முற்றிலும் முதலாளித்துவ கொள்கைகளை கொண்டிருக் கும் கட்சிகள்தான் அந்த கூட்ட ணிகளில் இடம்பெற்றுள்ளன.
அதனால்தான் அவர்களுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவது என்ற கேள்வியே எழவில்லை. என்னைப் பொருத்தவரை என்டிஏ மற்றும் இண்டியா ஆகிய2 கூட்டணிகளிலும் கைகோத்து செயல்படும் எண்ணம் எப்போதுமில்லை. கடந்த 2007-ம் ஆண்டைப் போலவே புறக்கணிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் சார்பாக சகோதரத்துவத்தின் அடிப்படையில் வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும். எங்களுடன் கூட்டணிஅமைக்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர். எனவே, ஊடகங்கள் மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை பரப்பக்கூடாது’’ என்றார்.