காவிரியில் தண்ணீர் திறக்கும் விவகாரம் தொடர்பாக தமிழகம் – கர்நாடகத்திற்கு இடையே தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகா தண்ணீர் திறக்க மறுப்பதாக தமிழகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில், ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. இதனை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம், விநாடிக்கு 5000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால், அணைகளில் போதிய இருப்பு இல்லாத காரணத்தால் தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தியுள்ளது. பற்றாக்குறை இருந்தபோதும் ஆகஸ்ட் 12 முதல் 27ஆம் தேதி வரை 13.328 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
முதல்வரின் காவிரி டெல்டா வருகை விவசாயிகளை வஞ்சித்து விட்டது பி .ஆர்.பாண்டியன் கண்டனம்
கர்நாடகா தென்மேற்கு பருவ மழையை நம்பியே உள்ளது, தமிழ்நாட்டின் அணைகளுக்கு வடகிழக்கு பருவமழை மூலமாக தண்ணீர் வர சாதகமான அம்சங்கள் உள்ளன. கர்நாடகாவில் மழை இல்லாததால் அம்மாநில நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், 2023-24ல் தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையில் இருந்த தண்ணீரை முறையாக தேக்கி, வெளியேற்றி இருந்தால் இன்னும் நீண்ட காலத்திற்கு தண்ணீரை பயன்படுத்தி இருக்கலாம் என மத்திய அரசு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தெரிவித்ததாகவும் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. மேலும், ஆணையத்தின் உத்தரவை ஏற்று ஆகஸ்ட் 29 அன்று பிலிகுண்டுலுவில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கர்நாடத்திற்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளித்துள்ள நிலையில், தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.