லாகூர்,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கி இருக்கிறது.
இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிலையில் அந்த போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டை ஷாஹின் அப்ரிடி வீழ்த்த அதிக வாய்ப்புள்ளதால் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;-
“நான் நிச்சயமாக அந்த போட்டியை பார்ப்பேன். ஏனெனில் அது நாம் பார்க்கப்போகும் மிகப்பெரிய போட்டியாகும். இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்தியா பேட்டிங்கில் வலுவாக இருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் தங்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் வலுவாக இருக்கிறது. குறிப்பாக முழுமையான வேகத்தில் பந்தை ஸ்விங் செய்து வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கும் இடது கை பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி மிகவும் தரமான பவுலர்.
எனவே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் பெரிய சவாலை கொடுப்பார் என்று நினைக்கிறேன். அதனால் இப்போட்டியின் ஆரம்பத்திலேயே ஷாஹின் அப்ரிடி புதிய பந்தை பயன்படுத்தி விராட் கோலியை சாய்த்தால் பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு ஏற்படும். எனவே ஷாஹின் அப்ரிடி மற்றும் இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களுக்கு இடையேயான ஆட்டம் தான் இப்போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும்” என்று கூறினார்.