அதானி குழுமம் முறைகேடு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக என இந்தியா முழுவதும் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அதானி குழும முறைகேடு தொடர்பாக 2 நாளேடுகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
“அதானி குழும முறைகேடுகள் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. பிரதமருக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பை 2 நாளிதழ்கள் வெளிப்படுத்தியுள்ளன. அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாருடையது ? அதானி பணமா அல்லது வேறு யாருடையதாவதா? அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணம் தொடர்பாக விரிவான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை. யாருடைய பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும்” என்று காட்டமாக பேசினார்.
நாட்டுக் கோழி, மட்டன்… வெளுத்துக்கட்டிய இம்ரான் கான்… சிறையில் இவ்ளோ சொகுசு வசதிகளா?
அதானி குழுமம் முறைகேடு விவகாரம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, “இதில் தொடர்புடையவர்களை சிறையில் அடைக்காதது ஏன்? இந்தியாவின் முக்கிய கட்டமைப்புகளை நிர்வகிக்கும் அதானி நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்தவர் முதலீடு செய்தது எப்படி” என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் இருந்து 100 கோடி டாலர் வெளிநாட்டுக்கு சென்று, வெளிநாட்டில் இருந்து பணம் முறைகேடாக திரும்பி வந்துள்ளது. மும்பை தாராவி, விமான நிலையம் என நாட்டின் எந்த உடமையாக இருந்தாலும் அதானியால் வாங்க முடியும். ஜி 20 மாநாடு கூடுவதற்குள் மத்திய அரசு இதுகுறித்து உரிய விளக்கம் தர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அதானி குழும முறைகேடு தொடர்பாக விசாரிக்க செபிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், செபி சுத்தமானவர் என சான்றிதழ் கொடுக்கிறது. ஆனால் இங்கு ஏதோ பெரிய தவறு உள்ளது தெளிவாகத் தெரிகிறது. செபி அமைப்பில் இருந்து விலகியவருக்கு அதானி நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பு தந்தது எப்படி?
அதானி நிறுவனத்தின் இயக்குநராக உள்ள ஒருவர், செபி அமைப்பின் அதிகாரியாக இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணை எப்படி இருந்திருக்கும்? ஆகவே புதிய விசாரணையை மேற்கொள்ளப்பட் வேண்டும்” என்றும் கூறினார்.