புதுடெல்லி: ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12 வரையில், விநாடிக்கு 7,200 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால், அதைக் கருத்தில் கொள்ளாமல், 5,000 கனஅடி தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை வாரியம் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளது’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தங்களால் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில், ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த இடையீட்டு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், “மழை அளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில்கொண்டுதான், தமிழகம் சார்பில், எங்களுக்கு தேவையான நியாயமான அளவு தண்ணீரை திறந்துவிடக் கோரியிருந்தோம். ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு எங்களது கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை.
8.988 டிஎம்சி அளவுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. ஆணையத்துக்கு, தமிழகத்துக்கான தண்ணீர் பற்றாக்குறை இருப்பது தெரியும். ஆனால், அது தெரிந்தும் கா்நாடக அரசு உரிய தண்ணீரை திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆரம்பத்தில் 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரியிருந்தோம். பிறகு, மழையளவு குறைவு உள்ளிட்ட காரணங்களால்தான், தண்ணீர் திறப்பு அளவை நாங்களே குறைத்து கேட்டிருந்தோம். அதாவது, 29.08.2023 முதல் 12.09.2023 வரையில், ஒரு விநாடிக்கு 7200 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல், 5,000 கனஅடி தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை வாரியம் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.
இந்த விவகாரத்தில், கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ள முடியாத தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கூடாது என்று அவர்கள் கூறியிருப்பது, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக அரசு காவிரி நீரை முறையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் ஏற்புடையது அல்ல. மேலும், இந்த தருணத்துக்கு தேவைப்படாத விசயங்களை எல்லாம் கர்நாடக அரசு வேண்டுமென்றே மனுவில் கொண்டு வந்துள்ளது. எனவே இந்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.