லாகூர்: நம் நாட்டுக்குள், ‘ட்ரோன்’கள் வாயிலாக போதைப் பொருட்களை கடத்திய பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவரிடம், அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக நம் எல்லைப் பகுதி யில் அமைந்துள்ள பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாகவும், ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் வாயிலாகவும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இவற்றில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த சம்பவங்களை நம் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள லாகூரில் கடந்த வாரம் போதைப் பொருட்கள், வெடிமருந்து கள், ஆயுதங்கள் போன்றவற்றை கடத்த முயன்ற ஆறு பேரை, அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தலுக்கு, லாகூர் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் தலைவர் மசார் இக்பால் தான் முக்கிய காரணம் என தெரிய வந்தது. இது குறித்து, லாகூர் டி.ஐ.ஜி., இம்ரான் கிஷ்வார் கூறியதாவது:
ட்ரோன்கள் வாயிலாக இந்தியாவுக்குள் 30 கிலோ ‘ஹெராயின்’ போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட மசார் இக்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து, அவர் பெரிய தொகையை பெற்றுள்ளார்.
முன்ஜாமின் பெற்றுஉள்ளதால் அவரை கைது செய்ய முடியவில்லை. இது குறித்து விசாரிக்க மூத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
போதைப் பொருள் கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்ட பிரிவின் தலைவரே, கடத்தலில் ஈடுபட்டுள்ளது பாகிஸ்தான் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement