புதுடெல்லி: “காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு, மேகேதாட்டில் அணை கட்டுவதுதான்” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளா்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. தங்களிடம் இருக்கும் தண்ணீர் தங்கள் மாநிலத்தின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு ஏற்ற அளவுதான் உள்ளது என்றும், எனவே தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்றும் அம்மாநில அரசு கூறி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க நேற்று முன்தினம் முதல் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா தற்போது காவிரியில் திறந்து விட்டு வருகிறது. இதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டியதில் 54 டிஎம்சி தண்ணீர் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் தற்போது உள்ள நீரை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 24 ஆயிரம் கன அடி நீர்திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை (செப்.1) விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், டெல்லியில் சட்ட ஆலோசனை மேற்கொண்டார். சட்ட வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் டி.கே.சிவகுமார் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், “எங்கள் தரப்பு சட்ட வல்லுநர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது கர்நாடகாவுக்கு மிகப் பெரிய வலி. ஏனெனில், எங்கள் மாநிலத்தில் தண்ணீர் இல்லை. மழையும் இல்லை.
இது குறித்து கர்நாடக தரப்பில் ஆஜராக உள்ள வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பார். கர்நாடக விவசாயிகளின் உணர்வுகளுக்கு உச்ச நீதிமன்றம் மதிப்பளிக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் தமிழக விசாயிகளை மதிக்கிறோம். அவர்களுக்கு தண்ணீர் தரக் கூடாது என நாங்கள் எண்ணவில்லை. தண்ணீர் இருந்திருந்தால், நாங்கள் வழங்குவோம். கர்நாடகாவில் தண்ணீர் இல்லை. தற்போது வறட்சி நிலவுகிறது. மேகேதாட்டில் அணை கட்டுவதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. மேகேதாட்டில் அணை கட்டுவது கர்நாடகாவுக்காக அல்ல; தமிழகத்துக்கு உதவுவதற்காகத்தான்” என்று தெரிவித்தார்.