பல்லகெலே,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பாபர் அசாம் 151ரன்கள் (14 பவுண்டரி , 4 சிக்சர்), இப்திகார் அகமது 109 ரன்கள்(11 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்தனர்.
இதனை தொடர்ந்து 343 ரன்கள் இலக்குடன் விளையாடிய நேபாளம் அணி தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 23.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து நேபாளம் அணி ஆட்டமிழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ,
ஆடுகளம் இரண்டு வேகத்தில் இருந்தது. நானும் ரிஸ்வானும் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினோம் .சில சமயங்களில், ரிஸ்வான் எனக்கு நம்பிக்கையை அளித்தார்.இப்திகார் அகமது வந்தபோது, நாங்கள் வித்தியாசமான கிரிக்கெட் விளையாடினோம். அவருடைய இயல்பான விளையாட்டை விளையாடச் சொன்னேன்.
இந்த போட்டி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு தயாராக உதவியாக இருந்தது. ஏனெனில், இது எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது. ஒவ்வொரு போட்டியிலும் 100% கொடுக்க விரும்புகிறோம், என தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.