பாட்னா, பெங்களூருவைத் தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும், நாளையும் (ஆக. 31, செப். 1) நடைபெறுகிறது. கூட்டணிக்கான ஒருங்கிணைப்புக் குழு, இலட்சினை, கூட்டுப் பிரசார வியூகம் போன்றவை இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘இந்தியா’ கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியதிலிருந்து பா.ஜ.க தரப்பில் முன்வைக்கப்படும் கேள்வி, ‘உங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பதுதான். அதற்கு, ‘உங்களிடம் இருப்பது மோடி என்கிற ஒரே ஒரு நபர்தான். ஆனால், எங்கள் கூட்டணியில் பிரதமருக்கான தகுதியுடன் பத்துப் பேர் இருக்கிறார்கள்’ என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
மும்பையில் ‘இந்தியா’ அணியின் கூட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாளான நேற்று, ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நிறுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கோரிக்கை எழுப்புவதாக ஒரு செய்தி கிளம்பியது. அந்த செய்தியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது, ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்பட வேண்டும்’ என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அவர், ‘ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் என்ற முறையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கிறேன். அவர் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளை எழுப்பி வருகிறார். மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பணவீக்கம் குறைவாக உள்ள டெல்லி மாடலை அளித்திருக்கிறார். ஒட்டுமொத்த தேசமும் பலனடையக்கூடிய மாடலை அவர் தந்திருக்கிறார். எனவே, பிரதமர் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், அது என் கைகளில் இல்லை’ என்று அவர் பதிலளித்திருக்கிறார்.
பிரியங்கா கக்கரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், உடனடியாக ஆம் ஆத்மியிடமிருந்து மறுப்பு வந்தது. ‘அது, பிரியங்கா கக்கரின் தனிப்பட்ட கருத்து. பிரதமர் பதவிக்கான ரேஸில் கெஜ்ரிவால் இல்லை’ என்று மறுப்பு தெரிவித்தார் டெல்லி அமைச்சர் அதிஷி.
பிரதமர் பதவிக்கான ரேஸில் கெஜ்ரிவால் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுவிட்டாலும், ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அரசியல் அரங்கில் தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகிறது.
பிரதமர் பதவிக்கான ரேஸில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இல்லை என்றுதான் தி.மு.க வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். ஸ்டாலினும், பிரதமராவதற்கான விருப்பம் தமக்கு இருப்பதாக ஒருபோதும் வெளிப்படுத்தியது இல்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரின் பெயர்கள்தான் அடிபடுகின்றன. ஆனால், இது குறித்து இந்தியா கூட்டணியில் இதுவரை விவாதிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் அவசரம் காட்டவும் இல்லை.
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒவ்வோர் அடியையும் நிதானமாக எடுத்துவைத்து முன்னேறுகிறார்கள் என்பதை கடந்த இரண்டு கூட்டங்களிலிருந்து பார்க்க முடிகிறது. கூட்டணிக்கு பெயர் வைப்பது, இலட்சினையை முடிவுசெய்து போன்றவற்றில் சர்ச்சைகள் இல்லாமல், கருத்தொற்றுமையுடன் செயல்பட முடியலாம். ஆனால், பிரதமர் வேட்பாளர் என்ற முடிவை எடுக்கும்போது, அதே கருத்தொற்றுமை இருக்குமா என்று தெரியவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY