புதுடில்லி:இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக, கடந்த ஏப்ரல் – ஜூன் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.80 சதவீதத்தை எட்டியுள்ளது.
விவசாயம் மற்றும் நிதி துறைகளின் சிறந்த செயல்திறன் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.அண்டை நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இதே காலகட்டத் தில் 6.30 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியா, 7.80 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதையடுத்து, உலக நாடுகள் வரிசையில், வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.கடந்த நிதியாண்டின் இதே ஏப்ரல் – ஜூன் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 13.10 சதவீதமாக இருந்தது.
தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, விவசாய துறையின் மொத்த மதிப்பு கூட்டல், முந்தைய நிதியாண்டின் ஏப்ரல் – -ஜூன் காலாண்டில் 2.40 சதவீதமாக இருந்தது, தற்போது, 3.50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.நிதி, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளின் வளர்ச்சி, 12.20 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 8.50 சதவீதமாக இருந்தது.
இருப்பினும், உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் ஜூன் காலாண்டில், மொத்த மதிப்பு கூட்டல் 6.10 சதவீதமாக இருந்தது, நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில், 4.70 சதவீதமாக குறைந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement