வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், அமெரிக்க ஹிந்து சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் தொன்மையான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டிலும், அண்டை நாடான நேபாளத்திலும் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அமெரிக்கா, வட அமெரிக்க நாடான கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஹிந்துக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
அமெரிக்காவில் மட்டும், 30 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்து சமூகத்தினர் வசிக்கின்றனர். இங்கு, அனைத்து ஹிந்து பண்டிகைகளும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஜார்ஜியா மாகாணம், ஹிந்து பண்டிகைகள் நிறைந்த அக்டோபர் மாதத்தை ‘ஹிந்து பாரம்பரிய மாதம்’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இம்மாகாண கவர்னர் பிரையன் கெம்ப் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது: ஜார்ஜியா மாகாணத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்க ஹிந்துக்கள் மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளனர். அவர்களை அங்கீகரிக்கும் வகையில் அக்டோபர் மாதம், ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கப்படுகிறது.
இந்த மாதம் முழுதும் இந்தியாவில் வேரூன்றிய ஹிந்து மதத்தின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் ஆன்மீக மரபுகளை விளக்கும் கொண்டாட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள வட அமெரிக்காவில் வாழும் ஹிந்துக்களின் கூட்டு அமைப்பான ‘கோஹ்னா’, மாகாண கவர்னர் கெம்புக்கு நன்றி தெரிவித்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement