திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளான செப்டம்பர் 22-ம் தேதி, திருமலைக்கு பைக்குகள் வர தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பிறகு தர்மா ரெட்டி கூறியதாவது: செப்டம்பர் 18-ம் தேதி பிரம்மோற்சவம் தொடக்க நாளில் ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை முதல்வர் ஜெகன்மோகன் காணிக்கையாக வழங்குகிறார். பிரம்மோற்சவத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகமானோர் சுவாமியை தரிசிக்கவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. ஆதலால், பிரம்மோற்சவ நாட்களில் மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கான சிறப்பு தரிசனங்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் மீனவ பக்தர்கள் 1,000 பேருக்கு தினமும் இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். செப்டம்பர் 22-ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை தொடங்குகிறது. அன்று திருப்பதியிலிருந்து திருமலைக்கு மோட்டார் பைக்குகள் வர தடை விதிக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக 4 மாட வீதிகளிலும் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூரை அமைக்கப்படும்.
பிரம்மோற்சவ வாகன சேவையின்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநில கலைஞர்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு இப்போதைய நிபந்தனைகளே பிரம்மோற்சவத்திலும் பின்பற்றப்படும். திருமலையில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் திருப்பதி ஆட்சியர் வெங்கடரமணா ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேஸ்வர ரெட்டி, திருப்பதி மாநகராட்சி ஆணையர் ஹரிதா மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.