மும்பை: ”அதானி குழுமத்தின் புதிய விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டின் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஹிண்டன்பர்க்’ என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
மோசடி
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழல்களை வெளிப்படுத்தும் திட்டம் என்ற புலனாய்வு நிருபர்கள் அடங்கிய அமைப்பு, அதானி குழுமம் தொடர்பாக ஆய்வு செய்து, இது தொடர்பான கட்டுரையை பல நாடுகளில் உள்ள பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மும்பையில் நேற்று கூறியதாவது: அதானி குழுமம், வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பி, அதை மாற்று வழியில் மீண்டும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து மோசடி செய்துள்ளதாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் வளர்ச்சி அடைந்தன. இந்த மோசடி தொடர்பாக பல நாடுகளில் உள்ள பத்திரிகைகளில் கட்டுரை வெளியாகியுள்ளது. இவை சாதாரணமான பத்திரிகைகள் அல்ல.
இந்த செய்தியும் சாதாரண செய்தி அல்ல. நம் நாட்டில் செய்யப்பட உள்ள முதலீடுகளையும், உலக அரங்கில் நம் நாட்டின் பெருமையையும் பாதிக்கக் கூடியது.
நம் நாட்டில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் பணம், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் எப்படி முதலீடு செய்யப்பட்டது? அந்தப் பணம் மீண்டும் நம் நாட்டுக்குள் வர எப்படி அனுமதிக்கப்பட்டது? இது உண்மையிலேயே அதானியின் பணம்தானா அல்லது வேறு யாருடைய பணமா?
இந்த மோசடியில், கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மூளையாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருடன், சீனாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரண்டு வெளிநாட்டவர் பெயர்களும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், கிட்டத்தட்ட நம் நாட்டின் அனைத்து சொத்துக்களையும் தன் வசம் வைத்துள்ள அதானி குழுமத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் எப்படி உள்ளனர்?
அதானி குழுமம் மோசடி தொடர்பாக விசாரித்த, ‘செபி’ எனப்படும் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் தலைவர், தற்போது, அதானி குழுமத்தின் ஊடக நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
விசாரணை
‘ஜி – 20’ மாநாடு புதுடில்லியில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள் வரவுள்ளனர். இந்த நேரத்தில் நம் நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன் மவுனத்தை கலைத்து, இந்த மோசடிகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்