ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியில் அந்த அணி நேபாளத்தை எதிர்கொண்டு 200 ரன்களுக்கும் மேலான வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் இலங்கை அணி சிறப்பாக பந்துவீசி வங்கதேச அணியை 200 ரன்களுக்கும் குறைவாக கட்டுப்படுத்தியதுடன், அதனை சேஸ் செய்து தங்களது வெற்றிக் கணக்கை தொடங்கினர். இந்திய அணியைப் பொறுத்தவரை தங்களது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் நாளை அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையில் இருக்கும் பல்லக்கல்லே மைதானத்தில் மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு இவ்விரு அணிகள் மோதும் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், கிரிக்கெட் உலகமே ஆவலுடன் இப்போட்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த முறை விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோன்றதொரு வெற்றியை இம்முறையும் இந்திய அணி பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் அணி முன்னெப்போதும் விட இப்போது சூப்பர் பார்மில் இருக்கிறது. கேப்டன் பாபர் அசாம் உட்சக்கட்ட பார்மில் இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக இப்திக்கார் உள்ளிட்டோரும் விளையாடும் நிலையில், பந்துவீச்சில் ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா ஹாரீஸ் ராவுப் ஆகியோர் ஒரே நேரத்தில் துல்லிய தாக்குதலை தொடுக்க காத்திருக்கிறார்கள்.
இவர்களை இந்திய அணி சமாளிக்கும் விதத்தைப் பொறுத்தே இந்திய அணியின் வெற்றி இருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்திருக்கிறார். இப்போதைக்கு இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், போட்டி நடைபெறுமா? என்பது தான். ஏனென்றால் இந்தியா – பாகிஸ்தான் மோத இருக்கும் பல்லக்கல்லே மைதானத்தில் கனமழைக்கு 90 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Accuweather.com-ன்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி கண்டியில் நடக்கும் இப்போட்டியில் மழை விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. பகலில் 94% மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இரவில் 87% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மாலை 5 முதல் 11 மணி வரை தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இப்போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிக்கு முடிவடையும். ஒருவேளை இந்த ஆட்டத்தை மழை பாதித்தால், முடிவை அறிவிக்க இரு அணிகளும் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் விளையாட வேண்டும். முதல் இன்னிங்ஸை மழை பாதித்தால் ஆட்டம் முற்றிலும் கைவிடப்படும். 2-வது இன்னிங்ஸ் பந்துவீசிய பிறகு 20 ஓவர்களில் மழை பெய்தால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்கள்.
போட்டியே நடைபெறாதபட்சத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும். பாகிஸ்தான் ஏற்கனவே நேபாளத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று 3 புள்ளிகளைப் பெற்று இருப்பதால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளி கிடைத்தால் கூட சூப்பர் 4 நிலைக்குத் தகுதி பெறும். மறுபுறம், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி கட்டாயம் நேபாளத்தை வீழ்த்த வேண்டும்.