`குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் இவருக்கு வரிசைகட்டி வரத் தொடங்கின.
ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து விட்டார். இந்நிலையில், புகழ் கோயம்புத்தூரைச் சேர்ந்த பென்ஸியாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
புகழ் அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்கு வர ஆசைப்பட்ட சமயத்திலிருந்தே பென்ஸியை காதலித்து வந்ததாக பல இடங்களில் தெரிவித்திருந்தார். நீண்ட நாள் காதலியைக் கடந்த ஆண்டு கரம் பிடித்தார் புகழ். இன்று அவர்களுடைய முதலாமாண்டு திருமண நாள். இந்த தினத்தில், பென்ஸி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துக் கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில்,
`என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள். இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள். ஆனால், இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை.
என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப் போகிறது என்று நினைக்கும்போது இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள். இனிய திருமண நாள் வாழ்த்துகள் பென்ஸி புகழ்!’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
வாழ்த்துகள் புகழ் – பென்ஸி!