தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை காவிரி தற மறுக்கிறது என்ற தமிழக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக நீரை தமிழ்நாட்டுக்கு கொடுத்துவிட்டதாக கர்நாடக துணை முதல்வரும், நீர் வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர் டெல்டா விவசாயிகள். காவிரி நீர் எட்டிப்பார்க்காததால் பயிர்களை காய்வதை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்த்த அளவு நீர் வரவில்லை என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. நீர் பற்றாக்குறை இருப்பின் இருக்கும் நீரை எவ்வாறு பங்கிட்டுக் கொள்வது என்பது குறித்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
ஆனால் கர்நாடகா அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரை மறுக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை குற்றம் சாட்டுகிறது. 40 டிஎம்சி அளவு நீர் வராமல் உள்ளது என்று கூறுகின்றனர்.
வினாடிக்கு 24000 கன அடி நீர் வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் 5000 கன அடி நீர் திறந்துவிடக் கோரி காவிரி ஒழுங்காற்றுக்குழு வைத்த பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையமும் உத்தரவிட்டது. ஆனால் அதற்கும் கர்நாடக அரசு ஒத்துவரவில்லை.
இந்நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் பட்டியல்: குறுஞ்செய்தி அனுப்பும் பணிகள் தீவிரம் – நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!
இந்த சூழலில் இன்று, “மேலாண்மை ஆணையம் கூறியதை விட தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீரை திறந்துவிட்டோம். நிர்ணயித்ததை விட கூடுதல் தண்ணீரை திறந்துவிட்டோம் என்பதையும் தமிழகத்திடம் தெரிவித்து விட்டோம். கர்நாடக மாநில அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்பது தமிழகத்துக்கு நன்றாக தெரியும். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது பயிரிடுவதை தமிழகம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் கூறியுள்ளார்.