மும்பை: மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வோம் என இண்டியா கூட்டணி சார்பில் மும்பை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இண்டியா கூட்டணி சார்பில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
முதல் தீர்மானம்: ‘எதிர்வரும் மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வது என இண்டியா கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளாகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம். தொகுதி பங்கீட்டுக்கான ஏற்பாடுகளை விரைவாகத் தொடங்கவும், விட்டுக் கொடுத்துச் செல்வது என்ற அணுகுமுறையைக் கையாண்டு தொகுதிப் பங்கீட்டை விரைவாக முடிக்கவும் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.’
இரண்டாம் தீர்மானம்: ‘மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை ஒருங்கிணைப்பது என இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளாகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம்.’
மூன்றாவது தீர்மானம்: ‘இணையும் பாரதம்; வெல்லும் இண்டியா’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஊடக உத்திகளை வகுப்பது, தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது என இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளாகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம்.’
ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு: இந்த மூன்று தீர்மானங்கள் மட்டுமல்லாது, மற்றுமொரு முக்கிய முடிவாக, 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சியின் ஜாவெத் அலி கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.