திருவள்ளூர்: “2011-ல் எந்த ஆட்சிக் காலத்தில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்போது அவர், தேர்தல் நேரத்தில் என்னைச் சுற்றி சுற்றி திமுக அரசு வழக்குப் போடுவதாக கூறுகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது” என்று வீரலட்சுமி கூறியுள்ளார்.
சீமான் மீதான புகார் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் விஜயலட்சுமியுடன் வந்திருந்த வீரலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஒவ்வொரு மேடை தோறும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் விஜயலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்து ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. சீமானுக்கு பயந்துகொண்டு அனைவரும் வாயை மூடிக்கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் அப்படியில்லை. சீமானுக்கு எதிராக பெண் சமூகம் வெகுண்டெழுந்து, அவருக்கான தண்டனையைப் பெற்றுக் கொடுப்பார்கள். விஜயலட்சுமிக்கு நீதியையும், நியாயத்தையும் பெற்றுக் கொடுப்பார்கள்” என்றார்.
அப்போது அவரிடம், என்ன மாதிரியான விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “2011 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது” என்றார். “2011-ல் எந்த ஆட்சிக் காலத்தில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்போது அவர், தேர்தல் நேரத்தில் என்னைச் சுற்றி சுற்றி திமுக அரசு வழக்குப் போடுவதாக கூறுகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் என்ன செய்தார்? கைக்கட்டி டம்மியாக உட்கார்ந்துவிட்டார்.
மேல் நடவடிக்கைக்காக விஜயலட்சுமி முயற்சித்தபோது, தடா சந்திரசேகர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதால், அவர் அமைதியாக இருந்துவிட்டார். மனைவியாக வைத்து வாழ்கிறேன் என்று சொன்ன வாக்குறுதியை நம்பி, அந்த நம்பிக்கையின்பேரில் அமைதியாக இருந்தார். கணவனை சிறையில் பிடித்து போடும்படி எந்த தமிழ்ப்பெண் கூறுவாள்?எனக்கு முன்னாடி 6 பேர் மீது இதேபோன்ற குற்றச்சாட்டு இருப்பதாக சீமான் தேவையற்ற வதந்தியை பரப்புகிறார்” என்று அவர் கூறினார்.
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்து, கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்பேரில், விஜயலட்சுமியிடம், துணை ஆணையர் உமையாள் நேற்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், யார் புகார் அளித்தாலும், காவல்துறை அது தொடர்பாக விசாரணை நடத்துவது அவர்களது கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால், என் மீது நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கூறுகிறேன். அதற்கெல்லாம் பயந்த ஆள் நான் இல்லை என்று விஜயலட்சுமி புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்தார். | வாசிக்க > நான் குற்றவாளியா என்பதை விசாரித்து நடவடிக்கை எடுங்கள் – நடிகை விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு சீமான் பதில்