சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், நாளை 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சி, நாமக்கல், கரூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் 2 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 – 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.