வானத்தில் நாம் பார்க்க முடிகிற இரண்டு வெளிச்சப் பந்துகளில் நிலவைத் தொட்டுவிட்டது இந்தியா.
சந்திரயான் – 1 விண்கலத்திலிருந்து செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் இறங்கியது. அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியில் வந்து நிலவின் தரைப்பகுதியைத் தொடர்ச்சியாக ஆராய்ந்துவருகிறது. இந்த நிலையில் இன்னொரு வெளிச்சப் பந்தான சூரியனை ஆராயப் புறப்பட்டுவிட்டது இந்தியா. செப்டம்பர் 2-ம் தேதி ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலத்தைச் சுமந்துகொண்டு விண்ணுக்குப் பாய்கிறது பி.எஸ்.எல்.வி ராக்கெட்.
இதுவரை அமெரிக்காவும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் மட்டுமே சூரியனை ஆய்வுசெய்ய ஆர்பிட்டர்களை விண்ணில் செலுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் மூன்றாவது நாடாக இணைகிறது இந்தியா. நம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான சூரியனை ஆய்வு செய்யும் இந்த முயற்சிக்கு சுமார் 380 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது இஸ்ரோ. நிலவில் ஒரு விண்கலத்தைத் தரையிறக்குவதே மிக நுட்பமான பணி. அதை இந்தியா சாதித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வது அதைவிடவும் சிக்கலான தொழில்நுட்பங்கள் கொண்ட நடைமுறை.
செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் பாயும் இந்த விண்கலம், ஆரம்ப நாட்களில் பூமியின் சுற்றுப்பாதையில்தான் இருக்கும். இதில் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்வதற்கு ஏழுவிதமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் செயல்பாட்டை பூமியில் இருந்தபடி இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்தபிறகு, இது புவி ஈர்ப்பு விசையைத் தாண்டிய விண்வெளிக்குச் செல்லும். 100 நாட்களைத் தாண்டி பயணம் செய்யும் இது, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படும். 2024 ஜனவரியில் இந்த வரலாற்றுச் சம்பவம் நிகழக்கூடும். லாக்ராஞ்ச் புள்ளி எனப்படும் அந்த இடத்தில் இருந்தபடி ஆதித்யா விண்கலம் சூரியனைக் கண்காணித்து தகவல்களை அனுப்பும். லாக்ராஞ்ச் 1 எனப்படும் இந்த இடத்தில் நிலைகொண்டு ஆய்வு செய்யப் போவதால்தான் இதற்கு ஆதித்யா எல்-1 என்று பெயர்.
இந்த லாக்ராஞ்ச் புள்ளியில் பூமி மற்றும் பிற கிரகங்களின் ஈர்ப்பு விசைகளற்ற சமநிலை நிலவும் என்பதால், இங்கிருந்தபடி ஒரு விண்கலம் செயல்பட மிக மிகக் குறைந்த ஆற்றலே தேவைப்படும். அதனால் விண்கலம் நீண்ட காலம் செயல்பாட்டில் இருக்க முடியும். சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் சென்று இறங்கியது போல, ஆதித்யா விண்கலத்தை சூரியனுக்கு நெருக்கமாகக் கொண்டுசெல்ல முடியாது. இது சென்றடையும் தூரமான 15 லட்சம் கிலோமீட்டர் என்பதே, பூமியிலிருந்து நிலாவுக்குச் செல்வதைப் போல நான்கு மடங்கு தொலைவு. ஆனால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் நூறில் ஒரு பங்கு தொலைவே அது.
என்றாலும், இந்த 15 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து ஆராய்வதில் பல நன்மைகள் உண்டு. நமது வளிமண்டலத்தால் வடிகட்டி தடுத்து நிறுத்தப்படும் சூரியனின் கதிர்வீச்சையும் இதனால் ஆய்வு செய்ய முடியும். பூமியிலிருந்து இப்படி ஆய்வு செய்ய முடியாது. சூரிய கிரகணம் போன்ற எந்தத் தடைகளும் இல்லாமல் தொடர்ச்சியாக ஆண்டு முழுவதும் சூரியனை ஆய்வு செய்ய முடியும். இதிலிருக்கும் ஏழு கருவிகளும் சூரியனின் தொடர்ச்சியான செயல்பாடு, சூரியனின் பண்புகள், அதன் வெளிப்புற அடுக்குகள், சூரியக்காற்றின் இயல்பு போன்றவற்றை ஆய்வு செய்யும்.
சூரியனில் பல விஷயங்கள் புதிரானவை. உதாரணமாக, சூரியனின் மேற்பரப்பைவிட, ‘கரோனா’ எனப்படும் வாயுக்கள் அடங்கிய அதன் சுற்றுப்பகுதியின் வெப்பநிலை பல மடங்கு அதிகம். மெழுகுவர்த்தி எரிகிறது என்றால், அதைத் தொட்டால் சுடும். அதிலிருந்து கையை சற்று விலக்கினால் சுடாது. இதுதான் நெருப்பின் இயல்பு. ஆனால், சூரியப்பந்தில் இருப்பதைவிட பல மடங்கு அதிக அனல், அந்தப் பந்தைச் சுற்றிய பரப்பில் இருக்கிறது.
சூரியக்காற்றும் வாயுக்களும் அடங்கிய இந்தப் பகுதி ஏன் கொதிக்கிறது என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதை ஆதித்யா ஆராயப் போகிறது. சூறாவளிகள் பூமியில் நிகழ்வது போல அவ்வப்போது சூரியனில் வெப்பக்காற்று சுழற்றியடித்து பெருமளவு அனல் வெளியேறும். ஏன் அப்படி நிகழ்கிறது, சூரியக்காற்றின் தன்மை என்ன என்பதையும் ஆதித்யா ஆராயப் போகிறது.
ஆதித்யா விண்கலத்தின் சிறப்பம்சம், அதில் இருக்கும் கரோனாகிராப். Visible Emission Line Coronagraph எனப்படும் இது, ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று சொல்லாமலே ஒவ்வொரு நிமிடமும் சூரியனை ஒரு புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். இப்படி தினமும் 1,440 புகைப்படங்கள் ஆண்டுமுழுக்க வந்துகொண்டே இருக்கும். மிகத் துல்லியமாக சூரியனின் பண்புகளை அறிந்துகொண்டு உலகத்துக்கே இந்தியா இனி சொல்லும்.