சென்னை: சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக ‛ஆதித்யா – எல் 1′ என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனாவிற்கு பிறகு, சூரியனை ஆய்வு செய்ய போகும் 5வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.
‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், முதல்முறையாக சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா – எல்1’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது. மொத்தம், 1,480.70 கிலோ எடை உடைய, அந்த விண்கலத்தை சுமந்தபடி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ‘பி.எஸ்.எல்.வி., – சி57’ ராக்கெட் இன்று காலை, 11:50 மணிக்கு சூரியனை நோக்கி பாய்ந்தது.
விண்ணில் ஏவப்பட்டது முதல் திட்டமிட்டபடி அடுத்தடுத்த கட்டங்களை கடந்து வெற்றிகரமாக பயணிக்கிறது. ராக்கெட் இயல்பாக பயணம் செய்கிறது. செயல்பாடுகளும் இயல்பாக உள்ளன.
விஞ்ஞானிகள் இடைவிடாமல் கண்காணித்து வருகின்றனர். ராக்கெட்டில் இருந்து ஆதித்யா – எல்1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது என இஸ்ரோ கூறியுள்ளது.
பூமி – சூரியன் அமைப்பில், பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம் உள்ள, ‘லாக்ரேஞ்ச் எல்1’ மைய புள்ளியில், ஆதித்யா – எல்1 விண்கலம் 125 நாட்கள் பயணத்திற்கு பின் நிறுத்தப்படும்.
அங்கிருந்தபடி, விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏழு அதிநவீன கருவிகள் வாயிலாக, சூரியனின் வெளிபகுதி வெப்ப சூழல், வளி மண்டலம் மற்றும் வெப்ப நிலையின் இயக்கவியல், ஒளிவட்டம், கதிர்வீச்சு, காந்தபுலம், சூரிய காற்றின் தன்மை, சூரியனின் எக்ஸ்ரே கதிர் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும்.
இதன் வாயிலாக, சூரியனால் ஏற்படும் அபாயங்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். ஆதித்யா – எல்1 விண்கலத்தில் உள்ள VElC தொழில்நுட்பத்தை பெங்களூரு GREST ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்