தமிழ் திரையுலகில் பலருக்கும் பரிச்சயமானவர் ஆர்.எஸ்.சிவாஜி.
பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.ஆர் சந்தானத்தின் மகன். இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர். நடிகர் கமல் ஹாசனின் நண்பர். சந்தானபாரதி இயக்கிய ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் அறிமுகமானவர். கமலின் ‘அபூர்வ சகோதர்கள்’ படத்தில் ஜனகராஜுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர். நேற்று வெளியான யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ படத்திலும் நடித்திருந்தார்.
நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்திலும் நடித்திருந்தார். நேற்று மாலை சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில் நடிகர் ராஜேஷ், நடிகை ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ராசி அழகப்பன் உள்ளிட்டோருடன் நடிகர் ஆர் எஸ் சிவாஜியும் கலந்து கொண்டார். இன்று காலை அவர் உயிரிழந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடல்நலக் குறைவால் காலமான அவருக்கு வயது 66. கமலின் ‘விக்ரம்’, மைக்கேல் மதன காம ராஜன், மை டியர் மார்த்தாண்டன், குணா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கார்கி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. ‘லக்கி மேன்’ படத்திலும் பெரிய ரோலில் நடித்திருந்தார். இவரின் மறைவு திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.