மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடை முறைகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமைலையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
த்திய அரசின் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வி முறை, ஒரே வரி, ஒரே குடும்ப அட்டை என்று எல்லாவற்றையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து டெல்லியில் அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டு எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது என சாடியுள்ளார்.
மேலும் இதன் உச்சகட்டமாக ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று நீண்ட காலமாக பாஜக கூறிவரும் திட்டத்தைச் செயல்படுத்த மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றும், குடியரசு தலைவர் பதவியில் இருந்தவரை மரபுகளை மீறி இத்தகைய குழுவுக்கு தலைவராக நியமித்த மோடி அரசின் செயல் ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என்றும் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எரிந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகார இந்துராஷ்டரத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் -பாஜகவின் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.