மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கை முடிவுக்கு ஓபிஎஸ் வரவேற்பு

சென்னை: மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கை முடிவினை முழு மனதோடு பாராட்டுவதாகவும் வரவேற்பதாகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், சில விதிவிலக்குகளைத் தவிர, 1967-ஆம் ஆண்டு வரை ஒரே சமயத்தில் நடத்தப்பட்டு வந்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதற்குப் பிறகு மத்திய அரசால் பல மாநில அரசுகள் அவ்வப்போது கலைக்கப்பட்டதன் காரணமாகவும், முன்கூட்டியே சில மாநிலச் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டதன் காரணமாகவும், மக்களவைத் தேர்தல் ஒரு சமயத்திலும், மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது தேர்தல் நடத்தப்படுவதன் காரணமாக அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதோடு, அடிக்கடி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதன் காரணமாக வளர்ச்சித் திட்டங்கள் தடைபடும் சூழ்நிலையும் உருவாகிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முழக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்தாலும், அதற்கான முன்னெடுப்பினை தற்போது மத்திய அரசு எடுத்துள்ளது. 2024-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட இருப்பதை முன்னிட்டு, இதனுடன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்த வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்து இருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கை முடிவு நடைமுறைக்கு வரும்பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகளில், மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடிய நிலை உருவாவதோடு, மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தங்குதடையின்றி மக்களைச் சென்றடையக்கூடும்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த ஆரம்பத்தில் பல்லாயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்கள் வாங்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றாலும், தொலைநோக்குப் பார்வையில் இதனை உற்றுநோக்கும்போது, வருங்காலங்களில் தேர்தல்களுக்கான செலவு கணிசமாக குறைக்கப்படும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அடுத்த ஆண்டு வரவிருக்கின்ற மக்களவைத் தேர்தலுக்குள், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் அரசமைப்புச் சட்டத்தில் ஐந்து திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மக்களின் நலனையும், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கை முடிவினை மனதார பாராட்டுவதோடு, அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஒத்துழைப்பினை அளிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.