நான் ஒரு சிறு நகரத்தில் வசிக்கிறேன். என் கணவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவரும், நானும் மூன்று வருடங்களுக்கு முன் தோழிகளானோம். நாள்கள் செல்லச் செல்ல, என் வாழ்க்கையில் அவள் அறியாமல் எதுவும் இல்லை, அவள் வாழ்க்கையில் நான் இல்லாமல் எதுவும் இல்லை எனும் அளவுக்கு நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டோம்.
நான் ஹோம் மேக்கர். தோழி, பியூட்டி பார்லர், ஜிம், பொட்டீக் என்று மூன்றையும் சேர்த்து ஒரே நடத்தில் நடத்தி வந்தார். நான் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அவளது பார்லருக்குச் சென்றுவிடுவேன். ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் இருவரும் பேசிக்கொண்டும், கஸ்டமர்கள் வந்து அவள் வேலைபார்க்கச் செல்லும்போது, என்னால் செய்யக்கூடிய சிறு சிறுவேலைகளைச் செய்துகொண்டு அவளுக்கு ஒத்தாசையாகவும் இருப்பேன். இதனால், அவளின் ரெகுலர் கஸ்டமர்கள் அனைவரும் எனக்கும் மிகவும் பழக்கம்.
இந்நிலையில், தோழி சில மாதங்களுக்கு முன்னர் கொஞ்சம் கவலையாக இருந்தாள். என்னவென்று கேட்டபோது, கணவரால் வீட்டில் கடன் பிரச்னை என்றும், வேலைக்குச் செல்லாத கணவர் பலரிடமும் கடனை வாங்கி ஊதாரியாகச் செலவு செய்வதையும் சொல்லி வருத்தப்பட்டாள். அவள் கணவர் பற்றி நான் ஏற்கெனவே அறிந்ததுதான் என்றாலும், கடன் பிரச்னையும் சேர்ந்துகொண்டதை எண்ணி வருந்தினேன்.
ஒருநாள், கடன்காரர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாயைக் கேட்டு வீட்டுக்கு வந்தபோது தன்னை மிகவும் ஆபாசமாகப் பேசி சென்றதாகவும், தொடர்ந்து தவறான நோக்கத்துடன் தனக்கு மெசேஜ்கள் அனுப்பி வருவதையும் சொல்லி அழுதாள் தோழி. ’எல்லா பிரச்னையும் உன் வீட்டுக்காரராலதானே? இவனைப் பத்தி அவர்கிட்ட சொல்லு…’ என்றேன். ‘அவரால ஏற்கெனவே கடன் பிரச்னை. இவனைப் பத்தி இப்போ சொன்னா, போய் சண்டை போட்டு, கேஸாகினு… இன்னும் பெரிய பிரச்னைகளை எல்லாம் இழுத்துட்டு வந்துடுவார். அதனாலதான் நம்பரை பிளாக் பண்ணிட்டு அமைதியா இருந்துடலாம்னு இருக்கேன். ஆனா, புதுப் புது நம்பர்ல இருந்து மெசேஜ் பண்றான், போன் பண்றான். சோஷியல் மீடியாவிலயும் தொந்தரவு பண்றான்’ என்று அழுதாள்.
தோழியின் நிலை எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எங்கள் குடும்ப சேமிப்பில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயை அவளிடம் கொடுத்து, ‘அவன் பிரச்னையை முடிச்சிவிடு’ என்றேன். கட்டியணைத்து நன்றி சொன்னாள். அடுத்த சில நாள்களில், கடன்காரனிடம் பணத்தை கொடுத்துவிட்டதாகவும், இனி பிரச்னை இல்லை என்றும் கூறினாள். மேலும், தன் தொழிலில் வரும் வருமானத்தில் மாதம் குறிப்பிட்ட தொகை என எனக்குத் தந்து, என் கடனை அடைத்துவிடுவதாகக் கூறினாள்.
இந்நிலையில், தோழி சில நாள்களாக பார்லரை திறக்கவில்லை. போன் செய்தபோது, உடல்நிலை சரியில்லை என்றாள். ’கணவர் வீட்டுல இருக்கார், எனக்கும் அவருக்கும் ஏதாச்சும் பிரச்னை நடந்துட்டே இருக்கு, போன் பேச முடியல. நான் உடம்பு சரியானதும் பார்லருக்கு வந்ததுக்கு அப்புறம் உனக்கு போன் செய்றேன், நீ வா. அப்போ பேசலாம்…’ என்றாள். ஆனால், ஐந்து நாள்களுக்குப் பின்னர், இரவோடு இரவாக அவர் பார்லரில் இருந்த பொருள்களை எல்லாம் காலிசெய்துவிட்டுச் சென்றதாகவும், என்ன விவரம் என்றும், அவர் பார்லருக்கு பக்கத்து வீட்டுக்காரப் பெண் என்னை ஒரு கடையில் பார்த்தபோது கேட்டார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தோழி எண்ணுக்கு அழைத்தபோது ஸ்விச்டு ஆஃப். சோஷியல் மீடியா அக்கவுன்ட்களையும் டீஆக்டிவேட், டெலீட் என்று செய்துவிட்டாள். ஒரு மாதம் வரை, அவளுக்கு என்ன பிரச்னையோ என்றுதான் மனம் பதைபதைத்தது. பிறகுதான் சில விஷயங்கள் தெரியவந்தன. அவள் கணவர், ஏதோ ஒரு கிரிமினல் வேலை செய்து யாருடைய பணத்தையோ லவட்டிக்கொண்டுள்ளார். மொத்தம் 25 லட்சம். அதுமட்டுமல்லாமல்.. அவள் கணவர் ஒரு பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்துவந்ததாகவும் கூறுகிறார்கள். இவையெல்லாம் இப்போதுதான் என் காதுக்கு வருகின்றன. என் தோழி இதுபற்றியெல்லாம் என்னிடம் சொன்னதே இல்லை.
மேலும், என் தோழியும் கஸ்டமர்கள் பலரிடமும் கடன் வாங்கியிருக்கிறாள் என்பதை அறிய நேர்ந்தது அடுத்த அதிர்ச்சி. அவர்கள் எல்லோருக்கும் நானும் மிகப் பரிச்சயம் என்பதால் இப்போது அனைவரும் என்னிடம் வந்து. ‘உங்க ஃப்ரெண்ட் எங்க இருக்காங்கனு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும், சொல்லுங்க’ என்கிறார்கள், சிலர் மிரட்டுகிறார்கள். ‘நானே அவளிடம் ஒன்றரை லெட்சம் கடன் கொடுத்துவிட்டு உங்களைப் போல்தான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னால் பலர் நம்பவில்லை. ’எல்லாம் கூட்டுக் களவாணி வேலையாதான் இருக்கும்’ என்று சிலர் என் காதுபடவே பேசுகிறார்கள்.
இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் மேலாக, ’பொண்ணு, கொள்ளைனு அவ வீட்டுக்காரர் என்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கார்னு எல்லாரும் சொல்லி ரொம்ப கேவலமா பேசிக்கிறாங்க. அந்தப் பொண்ணுகூட உனக்கு ஃப்ரெண்ட்ஷிப் தேவையா? பேச்சோட பேச்சா அவங்க வாய்ல எல்லாம் உன்னையும் அவலா போட்டுக்கிறாங்க’ என்று என் தம்பி வந்து வீட்டில் என்னிடம் மிகவும் கோபப்படுகிறான்.
வெளிநாட்டில் இருக்கும் என் வீட்டுக்காரரிடம் நான் நடந்ததை எல்லாம் சொல்ல, ‘மனுஷங்களுக்குள்ள என்னலாம் ரகசியம் இருக்கும்னு யாருக்கும் தெரியாது. யாரையும் முழுசா நம்பக் கூடாது. அதுவும் நானும் வெளிநாட்ல இருக்கும்போது, உன் பழக்கவழக்கங்கள்ல நீ எவ்வளவு கவனமா இருந்திருக்கணும்? நீதான் அவளை உயிர்த்தோழினு நினைச்சிருக்க. அவன் உன் பணத்தை எடுத்துட்டுப் போயிட்டா. ஒருவேளை தப்பு எல்லாம் அவ கணவர் மேலதான்னா, இவ அட்லீஸ்ட் உனக்கு ஒரு மெசேஜாவது அனுப்பிட்டு போயிருக்கணும்ல? மனுஷங்க எப்பவுமே சுயநலக்காரங்கதான்’ என்றார். அவர் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று புரிந்தது.
தோழிக்கு உதவி செய்ய நினைத்து, அவளுக்குக் கடன் கொடுத்தவர்களிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன். தப்பிக்க என்ன வழி?