Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடர் கடந்த ஆக. 30ஆம் தேதி பாகிஸ்தானின் முல்தான் நகரில் தொடங்கியது. கடந்தாண்டு டி20 போட்டி வடிவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் இம்முறை வர உள்ள ஐசிசி உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு ஒருநாள் போட்டி வடிவில் நடத்தப்படுகிறது. நடப்பு தொடரின் முதல் போட்டியில் நேபாள அணியை பாகிஸ்தானும், வங்கதேசத்தை இலங்கையும் வென்றன.
4 ஆண்டுகளுக்கு பின்
இந்நிலையில், நடப்பு ஆசிய கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி இலங்கையின் கண்டி நகரில் உள்ள பல்லேகல்லே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணியளவில் தொடங்கும் இப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அனைவரும் இன்றைய போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
போட்டி குறித்து பல்வேறு வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மூத்த வீரர்களும், வர்ணனையாளர்களும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள், யார் யார் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்பது குறித்த தங்களின் கணிப்பையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்றைய போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளரான சோபீப் அக்தரும் கருத்து தெரிவித்துள்ளார்.
டாஸ் வென்றால் இதை செய்யுங்கள்
இந்த போட்டி குறித்து ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் பேசும்போது, “பாபர் அசாம் மற்றும் அவரது குழுவினர் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்களாக திகழ்கின்றனர். இதற்கு முன்பும் அவர் இந்தியாவுக்கு எதிராக அழுத்தம் நிறைந்த ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அவருக்கு இப்போது அழுத்தம் இருக்காது. டாஸ் வென்றால், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி செய்தால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்தால், பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்படும். போட்டியில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஏனெனில் மாலை விளக்கு வெளிச்சத்தின் போது பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருக்கும்.
விராட் கோலிக்கு எந்த இடம்?
இரு அணிகளுக்கும் சிறந்த வாய்ப்பு உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள். இந்த போட்டியில் குல்தீப் யாதவும் விளையாடலாம். விராட் கோலி 3ஆவது இடத்தில் விளையாடுவாரா அல்லது 4ஆவது இடத்தில் விளையாடுவாரா என்ற விவாதம் நடந்து வருகிறது. அவருக்கு 5ஆவது இடத்தில் கூட வாய்ப்பு அளிக்கலாம். ஆனால் போட்டியில் வெல்ல பாகிஸ்தானுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது. முன்பு இருந்த மிடில் ஆர்டர் இப்போது இல்லை. அணி மிகவும் சிறப்பாக மாறியுள்ளது” என்றார்.
பாகிஸ்தான் உடன் மீண்டும் 1 போட்டி?
ஆசிய கோப்பை தொடரில் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவை குரூப் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. ஒரு அணி குரூப்பில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். குரூப் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
சூப்பர்-4 சுற்றில் ஒரு அணி, மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும். இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் செப். 17ஆம் தேதி நடைபெற உள்ளது. பெரும்பாலும், அடுத்த சூப்பர்-4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒருமுறை மோத அதிக வாய்ப்புள்ளது.