நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி, உடல்நலக் குறைவினால் இன்று காலை காலமானார்.
யோகிபாபுவுடன் அவர் நடித்திருந்த ‘லக்கிமேன்’ நேற்று வெளியாகியிருந்தது. இந்நிலையில் படத்தின் இயக்குநரான பாலாஜி வேணுகோபால், மறைந்த ஆர்.எஸ்.சிவாஜியின் நினைவுகளைப் பகிர்ந்தார்.
”எனக்கு ஆர்.எஸ்.சிவாஜி சாரை ரொம்ப வருஷமாவே தெரியும். நான் இயக்குநர் ஆவதற்கு முன்னாடி, ரீல்ஸ் வீடியோக்கள் நிறைய பண்ணிட்டிருந்தேன். வீடியோவை பார்த்துட்டு, உடனே ‘நீ இயக்குநர் ஆவதற்கு வேண்டிய தகுதிகள் நிறைவே இருக்குது’னு ஊக்குவிச்சிட்டே இருப்பார். ‘லக்கிமேன்’ படம் கமிட் ஆனதும், ஒரு சின்ன கதாபாத்திரத்திற்காக அவர்கிட்ட நடிக்கக் கேட்டேன். அது சின்ன ரோல்தான் என்றதும், தயங்கித் தயங்கி கேட்டேன். ஆனா அவரோ, ‘சின்ன ரோலா இருந்தால் என்ன? பெரிய ரோலா இருந்தால் என்ன? உன் படம் நான் பன்றேண்டா’னு முகமெல்லாம் மலர்ந்து வந்து நின்னார்.
அடிப்படையில் அவர் ஒரு உதவி இயக்குநர் என்பதால் மொத்தல்ல இயக்குநர் கண்ணோட்டத்தில்தான் உள்வாங்குவார். சாய்பாபா பக்தர். கமல் சார் கூடவே அதிகம் பயணிச்சதால, நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருப்பார். அவர்கிட்ட நிறையவே கத்துக்க முடியும். அவரைப் பார்த்தா கொஞ்சம் சிடுசிடுனு இருக்கற ஆள் மாதிரி தெரியும். ஆனா, பழகிப் பார்த்தவங்களுக்கு அவர் கலகலப்பான தங்கமான மனிதர்னு புரியும். அருமையான மனிதர். அவர் காட்சிகள் படமாக்கின பிறகு, அவரோட கதாபாத்திரத்தைக் குறைவா எழுதிட்டேனோனு தோண ஆரம்பிச்சிடுச்சு. யோகிபாபுவும் அவருமே ரொம்ப ஜெல் ஆகிட்டாங்க. அவர் மீது தனி வாஞ்சையோடு இருப்பார் யோகிபாபு சார். படத்தின் காட்சிகள்லேயுமே அந்த நெருக்கம் தெரியும்.
சிவாஜி சார் படப்பிடிப்புக்கு வரும் போது கூட சில நாட்கள்ல உடல்நலம் முடியாமல் இருந்தது. கொஞ்சம் டல் ஆகத்தான் வந்தார். ‘நீ கவலைப்படாதடா டப்பிங்கிற்கு வந்திடுவேன்’ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னார். ‘எல்லோரோட டப்பிங்கையும் முடிச்சிட்டு சொல்டா… கடைசியில வந்து பேசிக்கறேன்’னு சொன்னார். அதைப் போல கடைசியா அவர்தான் டப்பிங்கையும் பேசினார். ‘பிரிமியர் ஷோவுக்கு அவர் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை என்கிட்ட யாரும் சொல்லல. ‘நீ இயக்குநர்டா.. இன்னிக்கு நீ இப்படித்தான் இருக்கணும்’னு என்னைத் தட்டிக் கொடுத்தார். அன்னிக்கு முழு படமும் பார்த்துட்டு ‘படம் நல்லா வந்துருக்கு. இயக்குநரா ஜெயிச்சிருக்கே’னு சொல்லி சந்தோஷப்பட்டார்.
படம் ரிலீஸ் அன்னிக்கு அவர் ட்விட்டர் பக்கத்தில் கூட படத்தைப் பத்தி பதிவிட்டிருந்தார். ‘டேய் உன் அடுத்த படத்துல நான் ஃபிட்டா வருவேன்டா’னு சொல்லியிருந்தார். ரொம்பவே தன்னம்பிக்கை மிகுந்த மனிதரா இருந்தார். இன்னிக்கு காலையில செய்தி கேள்விப்பட்டதும், அதிர்ச்சியாகிடுச்சு. நேத்து கல்லு மாதிரி இருந்த மனுஷன்.. இன்னிக்கு இல்லைனதும், கண் கலங்கிட்டேன். அவரோட கடைசி சிரிப்பு என் படத்துலதான்.. அந்த சிரிப்பு எப்பவும் எல்லோருடைய இதயத்திலும் நிறைந்து நிற்கும்.” – குரல் உடைந்து பேசினார் பாலாஜி.