அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு என்ன ஆச்சு? திடீர் உடல்நலக் குறைவு என்ன காரணம்?

திமுக அரசில் மருத்துவத் துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் மக்கள் உடல்நலனோடு சேர்த்து தனது உடல்நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். காலையிலேயே எழுந்து பல கி.மீ நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சியெல்லாம் முடித்துவிட்டுதான் மற்ற பணிகளை தொடங்குவார். மேலும், மாரத்தான் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை வாங்கி குவித்துள்ளார்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்தபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர். தொடர்ந்து, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது. அதில், மா.சுப்பிரமணியன் இதயக் குழாயில் அடைப்புகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து சோதனை முடிந்து வீடு திரும்பி ஓய்வெடுத்தார் மா.சுப்பிரமணியன்.

சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் இன்று தனது அரசியல் மற்றும் அரசு சார்ந்த பணிகளை ஆரம்பித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு வாரமாக வெளி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இரவில் தூக்கம் குறைவாகவே இருந்தது. நிகழ்வு நடந்த அன்று காலை 13 கி.மீ நடந்ததோடு 1 மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டேன். 20 பார்வையாளர்களை நின்றுகொண்டே சந்தித்தேன். தண்ணீர் குடிக்க மறந்துவிட்டேன். நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுவிட்டது. தண்ணீர் குடித்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது” என்று விவரித்தார்.

பணியில் இல்லாத பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட மா.சுப்பிரமணியன்

மருத்துவமனைக்கு வந்ததுதான் வந்துவிட்டோம், அனைத்து பரிசோதனைகளையும் முடித்துவிட்டு சென்றுவிடலாம் என்று கூறி மருத்துவர்கள் ஆஞ்சியோ உள்ளிட்ட சோதனைகளை செய்தனர் என்று கூறிய அவர், அனைத்தும் நார்மலாகவே இருந்தது. வழக்கம் போல பணிகளை ஆரம்பித்துவிட்டேன், இரண்டு நாட்களாக நடைபயிற்சி செய்து வருகிறேன் என்றார்.

திருச்சியில் சித்தா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென ஆயுஷ் அமைச்சகத்திடம் கேட்டுள்ளோம், தமிழகம் வரும் ஆயுஷ் அமைச்சரிடம் கோரிக்கை வைப்போம். சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதாவிற்கு அனுமதியளிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் வாயிலாக ஆளுநருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவுள்ள இடம் அருகே காலி இடத்தில் ஹோமியோபதி கல்லூரி அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.