பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்திருகிறார்.
தமிழில் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி கமல்ஹாசன் மற்றும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். நடிகர், உதவி இயக்குநர், ஒலி வடிவமைப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர் ஆர்.எஸ்.சிவாஜி. நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்திலும் நடித்திருந்தார்.
சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். யோகிபாபுவுடன் அவர் நடித்திருந்த ‘லக்கிமேன்’ நேற்று வெளியாகி இருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்திருக்கிறார். அவரின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சிவாஜி மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்து இயக்குநர் நெல்சன் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “ ஆர்.எஸ்.சிவாஜியின் அர்ப்பணிப்பையும், உழைப்பையும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின்போது பார்த்து வியந்திருக்கிறேன். அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.