கோவை:
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை பாஜக ஆதரிப்பதற்கான காரணங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார்.
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு கமிட்டியைும் மத்திய அரசு அமைத்திருக்கிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. அதே சமயத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக கூறியுள்ளது.
இந்த சூழலில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் திமுகவின் எதிர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை தமிழக பாஜக முழுமையாக வரவேற்கிறது. நம் நாட்டில் அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1957, 1962, 1967 ஆகிய வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தல்களும் ஒருங்கிணைந்து தான் நடத்தப்பட்டன. கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவிடப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த முறையை நாம் பின்பற்றி வந்திருக்கிறோம்.
ஆனால், 1967-க்கு பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பல மாநிலங்களின் ஆட்சியை கலைத்தது. இவ்வாறு 105 முறை மாநிலத்தில் இருக்கும் அரசுகளை காங்கிரஸ் கலைத்ததால் ஆட்சிக்காலங்கள் பாதியிலேயே முடிவடைந்தன. இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் தான் சட்டமன்றத்திற்கு தனியாகவும், நாடாளுமன்றத்திற்கு தனியாகவும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சுயநலவாதிகள், குடும்ப ஆட்சி செய்பவர்கள், ஊழல் செய்பவர்கள்தான்
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். மக்கள் வரிப்பணம் வீணாவது தடுக்கப்படும். அரசு அதிகாரிகள் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள். இதனால்தான் நாங்கள் இந்த திட்டத்தை ஆதரிக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.