"நிலவின் மடியில்".. வேலையை முடித்துக் கொண்டு தூங்கச் சென்ற ரோவர்.. "Don't Disturb Me"

பெங்களூர்:
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை செய்து பூமிக்கு அனுப்பிய ரோவர் கருவி, தனது வேலை முடிந்ததால் ஸ்லீப் மோடுக்கு (Sleep Mode) சென்றுவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உலகில் வேறு எந்த நாடுகளும் செய்யாத சாதனையை கடந்த மாதம் 23-ம் தேதி இந்தியாவின் இஸ்ரோ செய்தது. இதுவரை எந்த வல்லரசு நாடுகளாலும் செல்ல முடியாத நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் ரோவர் கருவியை வெற்றிகரமாக இறக்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள். முதலில் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, அதன் பிறகு அதனுள் இருந்து வெளிவந்தது ரோவர் கருவி.

அதன் பின்னர், நிலவின் இருள் நிறைந்த தென் துருவத்தை உலகுக்கே வெளிச்சம் போட்டு காட்டியது ரோவர். கார் போன்று இருக்கும் ரோவர் கருவி நிலவில் பல இடங்களுக்கு சென்று அங்குள்ள மண், கற்களை ஆய்வு செய்தது. இதன் தொடர்ச்சியாக, நிலவில் ஆக்சிஜன் இருப்பதையும், சல்ஃபர், பிளாஸ்மா ஆகியவை இருப்பதையும் கண்டுபிடித்தது ரோவர். மேலும், இதுதொடர்பான புகைப்படங்களையும், ஆய்வுத் தரவுகளையும் இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தது.

ரோவர் கருவியின் இந்த ஆய்வு முடிவுகள் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே நிலவை பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தியது. மேலும், நிலவில் விண்வெளி மையம் அமைப்பதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் திட்டமிட்டு வரும் நிலையில், ரோவர் கருவியின் இந்த ஆய்வு முடிவுகள் அதற்கு பெரிதும் பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

“ஐ யம் வெயிட்டிங்”..! விக்ரம் லேண்டருக்குள் காத்திருக்கும் ரோவர்.. 4 மணிநேரம் காத்திருப்பு எதற்கு?

இந்நிலையில், நிலவில் கிட்டத்தட்ட 9 நாட்கள் (பூமியை பொறுத்தவரை 9 நாள்.. நிலவில் அரை நாள் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது) இருந்து பல முக்கிய தகவல்களை பூமிக்கு அனுப்பி வைத்த ரோவர் கருவி இன்று இரவு (செப்.2) 10 மணியளவில் ஸ்லீப் மோடுக்கு சென்றுவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரிய ஒளியில் செயல்படும் ரோவர் கருவிக்கு, அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் சூரிய ஒளி கிடைக்காது. அதனால் செப்டம்பர் 22-ம் தேதி வரை நன்றாக தூங்கி ஓய்வெடுக்க இருக்கிறது ரோவர். பின்னர் சூரிய ஒளி கிடைத்தவுடன் செப்டம்பர் 22-ம் தேதி கண்விழித்து தனது வழக்கமான பணிகளை ரோவர் செய்யும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. குட்நைட் ரோவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.