அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலை சமீபத்தில் பார்க்க சென்ற ‘டைடன்’ நீர்மூழ்கி வெடித்துச் சிதறி ஐந்து பேரும் பலியாகினர். உலக வரலாற்றில் டைட்டானிக்
கப்பலை விட அதிக ஆழத்தில் சில கப்பல்கள் மூழ்கி உள்ளன.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் – அமெரிக்காவின் நியூயார்க் புறப்பட்ட ‘டைட்டானிக்’ சொகுசு கப்பல் 1912 ஏப். 15ல் வட அட்லாண்டிக் கடலின் பனிப்பாறையில் மோதி உடைந்து கடலில்
மூழ்கியது. இதில் 1500 பேர் பலியாகினர். இதன் உடைந்த பாகம் கடல் மேல்பரப்பில் இருந்து 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் பிரிட்டனின் மெகல்லன் நிறுவனம், ‘டைடன்’ என்ற நீர்மூழ்கியை உருவாக்கியது. இதன்மூலம் 12,500 அடி ஆழத்தில்
மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்த்து ரசிக்கலாம் என அறிவித்தது. இதன்படி ஐந்து பேர் கொண்ட குழு, ஜூன் 18ல் இந்த நீர்மூழ்கியில்
பயணத்தை தொடங்கினர். டைட்டானிக் மூழ்கியிருக்கும் இடத்துக்கு கப்பலில் சென்று, பின் ‘டைடன்’ நீர்மூழ்கி மூலம் 96 மணி நேரத்தில்
ஆழ் கடலுக்கு சென்று டைட்டானிக் கப்பலை பார்த்து திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் பாதி ஆழம் சென்ற போது நீர்மூழ்கி வெடித்துச் சிதறி ஐந்து பேரும் பலியாகினர். 12,500 அடி ஆழம் என்பதால் நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் அங்கு செல்வது சவால் நிறைந்தது.
டைட்டானிக் கப்பலை விட, அதிக ஆழத்தில் மூழ்கி இருக்கும் கப்பல்கள்
யு.எஸ்.எஸ்.சாமுவேல் ரோபெர்ட்ஸ் 1944
அமெரிக்க போர்க்கப்பலான இது, இரண்டாம் உலகப்போரின் போது 1944 அக். 25ல் பிலிப்பைன்சின் சாமர் தீவு கடல் பகுதியில் நடந்த சண்டையில் , ஜப்பானிய
படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது 2022 ஜூனில் 22, 620 அடி ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. உலகில் இதுவரை கண்டறியப்பட்ட கப்பல்களில் அதிக ஆழத்தில் இருப்பது இதுதான். இது டைட்டானிக் கப்பல் இருக்கும் ஆழத்தை விட இரண்டு மடங்கு அதிகம். இக்கப்பலின் நீளம் 306 அடி. வேகம் மணிக்கு 44 கி.மீ.
எஸ்.எஸ்.சிட்டி ஆப் கெய்ரோ
பிரிட்டனை சேர்ந்த இக்கப்பல் 1942ல் இரண்டாம் உலகப்போரின் போது ஆப்ரிக்க கடலில் மூழ்கியது. இதன் நீளம் 450 அடி. வேகம் மணிக்கு 22 கி.மீ. 311 பேர் பயணம் செய்தனர். இக்கப்பலின் உடைந்த பாகம்
ஆப்ரிக்க கடலில் 16,896 அடி ஆழத்தில் இருப்பது 2011ல் கண்டறியப்பட்டது.
யு.எஸ்.எஸ்.ஜான்ஸ்டன்
அதிக ஆழத்தில் இருக்கும் இரண்டாவது கப்பல் அமெரிக்காவின் ‘ஜான்ஸ்டன்’, இதுஇரண்டாம் உலகப்போரின் போது 1944 அக். 25ல், பிலிப்பைன்ஸ் கடலில் ஜப்பான் படையுடன் நடந்த சண்டையில் தாக்கப்பட்டு மூழ்கியது. 187 பேர் பலியாகினர். இது 2021ல் 21,222 அடி ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் நீளம் 376 அடி. வேகம் மணிக்கு 70 கி.மீ.
எஸ்.எஸ்.ரியோ கிரான்டி 1944
ஜெர்மனியின் போர்க்கப்பல் ‘ரியோ கிரான்டி’. 1944 ஜன. 4ல் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது தெற்கு அட்லாண்டிக் கடலில் 18,904 அடி ஆழத்தில் இருப்பது 1996 ல்
கண்டறியப்பட்டது.
ஆழமான இடம்
உலகின் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ள ‘மரியானா அகழி’. இதன் ஆழம் 36,100 அடி. முதன்முதலாக 2012ல் ‘டைட்டானிக்’ பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த இடத்துக்கு தனியாக சென்று வந்து சாதனை படைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்