சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கம், உணவுக்கூடம், கூட்ட அரங்குகள், கணினி ஆய்வகம், வகுப்பறைகள் ஆகியவை வாடகைக்கு விடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அவற்றுக்கு ஒரு நாளைக்கு வாடகையாக ரூ.1200 முதல் ரூ.40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் அதன் கலையரங்கம் தொடங்கி வகுப்பறை வரை அனைத்தையும் வாடகைக்கு விடுவதாக அறிவிப்பது இதுவே முதல்முறையாகும். உயர்கல்வி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்வி நலன்களுக்கு எதிராக இத்தகைய வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
“சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கலையரங்குகளை அரசு நிகழ்ச்சிக்காக வாடகைக்கு விடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் அரங்கில், அண்மையில் போலி பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையானதையடுத்து அந்த நடைமுறைகள் கைவிடப்பட்டன.
ஆனால், பெரியார் பல்கலைக்கழகம் வகுப்பறைகள் தொடங்கி உணவுக்கூடம் வரை வாடகைக்கு விடுவதாக அறிவித்திருப்பது ஏற்க முடியாதது ஆகும். வகுப்பறைகளோ, கணினி ஆய்வகமோ ஒரு நாளைக்கு வாடகைக்கு விடப்பட்டால், அவற்றில் அன்று நடைபெற வேண்டிய வகுப்புகளும், ஆய்வுகளும் தடை படாதா? அதனால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?
பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஏதேனும் போலி கல்வி நிறுவனங்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் வகுப்புகளையும், ஆய்வகங்களையும் வாடகைக்கு எடுத்து, அவற்றில் சில வகுப்புகளை நடத்தி, பெரியார் பல்கலைக்கழகம் வழங்கியது போன்ற பட்டங்களை வழங்க வாய்ப்பிருக்கிறது.
சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது
இத்தகைய முறைகேடுகளுக்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இடமளிக்கக் கூடாது. இவை அனைத்தையும் கடந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறைக்கும் கடுமையான இடப்பற்றாக்குறை நிலவும் சூழலில், வகுப்பறைகளைக் கூட வாடகைக்கு விட வேண்டிய தேவை என்ன?
தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பொருளாதார தன்னிறைவு அடைய வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நோக்கம் ஆகும். அதற்காக பல வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக அறிவியல், கணினி உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளை நடத்தி, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அவற்றுக்கு காப்புரிமை பெறலாம்; பெரியார் பல்கலைக்கழகத்தை தலைசிறந்த பல்கலைக்கழகமாக்கி வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்ப்பதன் மூலம் வருவாய் ஈட்டலாம். இத்தகைய ஆக்கப்பூர்வமான வழிகளை விடுத்து, கட்டிடங்களை வாடகைக்கு விடுவதை ஏற்க முடியாது. இந்த நிலை தொடர்ந்தால் பெரியார் பல்கலைக்கழகம் என்ற பெயர் மறைந்து பெரியார் வணிகக் கூடம் என்ற பெயர் நிலைத்து விடக் கூடும்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து கட்டிடங்களிலும் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் கைரேகை வருகைப் பதிவேட்டுக் கருவி அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக முகப் பதிவு கருவிகள் பொருத்தப்படுகின்றன. இது முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும். இத்தகைய வீண் செலவுகளை கட்டுப்படுத்தினாலே, கட்டிடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைப்பதை விட அதிக தொகையை சேமிக்க முடியும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தான் பெரியார் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது; நிகழ்ச்சிகளுக்கு கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்காக அல்ல. இந்த உண்மையை புரிந்து கொண்டு கட்டிடங்களை வாடகைக்கு விடும் முடிவை பெரியார் பல்கலைக்கழகம் கைவிட வேண்டும்; கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.