புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக் குழுவில் இடம் பெற காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுத்துவிட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இந்தக் குழுவில் இடம் பெற காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுத்துவிட்டார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குழுவில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, அவருக்கு பதிலாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத்தை இணைந்துள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அக்கடிதத்தில், “பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்திற்குரிய, நடைமுறை ரீதியாக சாத்தியமற்ற யோசனையை தேசத்தின் மீது திணிக்கும் திடீர் முயற்சியே ஒரே நாடு ஒரே தேர்தல். இது, அரசாங்கத்தின் மறைமுக நோக்கங்கள் குறித்து கடுமையான கவலையை எழுப்புகிறது. எனவே தான் இந்த ஆய்வுக்குழு கண் துடைப்பு என்று அஞ்சுகிறேன்.
மேலும் இக்குழுவில் ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி தலைவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அவரை புறக்கணித்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயக முறையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் செயல். இப்படியான சூழ்நிலையில், உங்கள் அழைப்பை நிராகரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.