உலக அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்கள் கோலோச்சுகின்றனர்! | Leaders of Indian origin are competing in world politics!

சிங்கப்பூர்-உலகின் பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியினர் அரசியலில் கோலோச்சுவதும், அதிபர், பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளிலும் இருப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் நேற்று முன்தினம் இணைந்துள்ளார் சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம்.

பல நாடுகளில் முக்கிய பதவிகளில் உள்ள இந்திய வம்சாவளி யினர் தொடர்பான பட்டியல் ஒன்று சமீபத்தில் தயாரிக்கப்பட்டது.

இதன்படி, இந்திய வம்சாவளியினர் 200க்கும் மேற்பட்டோர், 15க்கும் மேற்பட்ட நாடுகளில் முக்கிய அரசியல் பதவிகளில் உள்ளனர்.

இதில், 60 பேர் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட பெரிய பதவிகளில் உள்ளதாக பட்டியல் தெரிவிக்கிறது.

நம் வெளியுறவுத் துறை புள்ளி விபரங்களின்படி, 3.2 கோடி இந்திய வம்சாவளியினர் உலகெங்கும் பரவியுள்ளனர். உலகெங்கும் அதிகம் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் தான் முன்னிலையில் உள்ளனர்.

இந்நிலையில் ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியான தர்மன் சண்முகரத்னம் வென்றுள்ளார். மொத்த முள்ள ஓட்டுகளில், 70.4 சதவீதத்தை அவர் பெற்றுள்ளார்.

உலகெங்கும் முக்கிய பதவிகளில் உள்ள மற்ற இந்திய வம்சாவளியினர்:

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் உள்ளார். அந்நாட்டின் முதல் பெண் மற்றும் முதல் இந்திய வம்சாவளி துணை அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஆப்ரிக்க நாடான ஜமைக்காவையும், தாய் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள்

அமெரிக்காவில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் எம்.பி.,க்களாக இருக்கும் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால், அமி பேரா, ஸ்ரீ தனேதர் ஆகியோர் இந்திய வம்சாவளியினர்

கலிபோர்னியாவில் முக்கிய அரசியல் தலைவராக உள்ள ஹர்மீத் தில்லான், குடியரசு கட்சியின் தேசிய குழுவின் தலைவராக சமீபத்தில் தேர்வானார்

 அடுத்தாண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில், நம் நாட்டின் நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி இருவரும் உள்ளனர்

 ஐரோப்பிய நாடான பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர், முதல் ஹிந்து பிரதமர் என்ற பெருமையை பெற்று உள்ளார் ரிஷி சுனக்

 கோவாவைச் சேர்ந்த சுலேலா பிரேவர்மேன், பிரிட்டன் உள்துறை அமைச்சராக உள்ளார். கோவாவைச் சேர்ந்த கிளேரி கோடின்ஹோவும் பிரிட்டனில் அமைச்சராக உள்ளார். இவர் சமீபத்தில் மின்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்

 ரிஷி சுனக்கிற்கு முன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில், இந்திய வம்சாவளியினரான பிரீத்தி படேல், உள்துறை அமைச்சராகவும், அலோக் சர்மா, சர்வதேச வளர்ச்சிக்கான அமைச்சராகவும் இருந்தனர்

 ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் பிரதம ரான லியோ எரிக் வரத்கர், ஒரு இந்திய வம்சாவளி

 போர்ச்சுக்கல் பிரதமராக, அனடோனியோ கோஸ்டா, ௨௦௧௫ முதல் இருந்து வருகிறார். இவர், இந்திய – போர்த்துகீஸ் பெற்றோருக்கு பிறந்தவர்

 வட அமெரிக்க நாடான கனடாவின் முதல் ஹிந்து அமைச்சர் என்ற பெருமையை அனிதா ஆனந்த் பெற்று உள்ளார். இவருடைய தந்தை தமிழகத்தையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள்

 இவரைத் தவிர ஹர்ஜித் சஜ்ஜன், கமல் கேரா ஆகியோரும் கனடாவில் அமைச்சர்களாக உள்ளனர்

 பசிபிக் தீவு நாடான நியூசிலாந்தில் அமைச்சராகியிருக்கும் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சென்னையில், கேரள பெற்றோருக்கு பிறந்தவர்

 ஆப்ரிக்க நாடான டிரினாட் மற்றும் டொபாகோவின் அதிபராக தேர்வாகியுள்ள கிறிஸ்டின் கார்லா கங்கலுா, இந்திய – டிரினாட் பெற்றோருக்கு பிறந்தவர்

 வழக்கறிஞரும், எழுத்தாளருமான பிரீதம் சிங், சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராக, 2020 முதல் இருந்து வருகிறார்

 தேவானந்த் தவே சர்மா, 2019ல் ஆஸ்திரேலிய பார்லிமென்டின் முதல் இந்திய வம்சாவளி எம்.பி.,யாக தேர்வானார்

 தென் அமெரிக்க நாடான குயானாவின் அதிபர் முகமது இர்பான் அலி, இந்திய – குயானா பெற்றோருக்கு பிறந்தவர்

 கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் பிரதமராக, 2017 ஜன., முதல் இருப்பவர், பிரவிந்த் ஜக்நாத். இவர் ஹிந்து குடும்பத்தில் பிறந்தவர்

 மொரீஷியஸ் அதிபராக, 2019 முதல் இருப்பவர், பிருத்விராஜ்சிங் ரூபன். இவரும் இந்திய ஆரிய சமாஜ் ஹிந்துக் குடும்பத்தில் பிறந்தவர்

 தென் அமெரிக்க நாடான சூரிநாமின் அதிபராக, இந்திய வம்சாவளியான சந்திரிகாபிரசாத் சான் சந்தோகி, 2020 முதல் இருந்து வருகிறார்

 கிழக்கு ஆப்ரிக்க நாடான செஷல்ஸ் அதிபராக, 2020ல் இருந்து இருந்து வருகிறார் வேவல் ராம்கலாவன். இவருடைய தாத்தா பீஹாரைச் சேர்ந்தவர்.

சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா – சிங்கப்பூர் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்.

– நரேந்திர மோடி

பிரதமர்

காத்திருக்கிறேன்!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.