லக்னோ: இந்தியா ஒருபோதும் இந்து தேசமாக இருந்ததே இல்லை என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார். இந்து ராஷ்டிரம் பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்துக்கு பதிலடி தரும் வகையில் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் சுவாமி பிரசாத் மவுரியா, “இந்தியா இந்து தேசம் அல்ல. எப்போதுமே இந்தியா இந்து தேசமாக இருந்தது இல்லை. இந்தியா இயல்பிலேயே பன்முகத்தன்மை கொண்ட தேசமாகும். நமது அரசியல் சாசனம் மதச்சார்பற்ற கொள்கையின்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியர்களே. நமது அரசியல் சாசனம் அனைத்தும் மதங்களையும், நம்பிக்கைகளையும், பிரிவுகளையும், கலாச்சாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர் எஸ்எஸ்தலைவர் மோகன் பாகவத், “இந்தியா ஓர் இந்து தேசம். அனைத்து இந்தியர்களும் இந்துக்களே. இந்துக்கள் அனைவரும் இந்தியாவின் பிரதிநிதிகள். இப்போது இந்தியாவில் உள்ள அனைவருமே இந்து கலாசாரத்துடன், இந்து மத முன்னோர்களுடன், இந்து நிலத்துடன் தொடர்புடையவர்களாவர். சிலர் இதனைப் புரிந்து கொண்டனர். சிலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. சிலர் புரிந்துகொண்டாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. அவர்களின் சுயநலனும், பழக்கவழக்கங்களும் அதற்குக் காரணம்” என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.