தருமபுரி அருகிலுள்ள பிடமனேரி ஒருநாள் மழையிலேயே நிறைந்து உபரிநீர் விளைநிலங்களில் நுழைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதலே வானில் மேகங்கள் திரண்டு மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. மேலும், தொடர்ந்து இடிமுழக்கம் ஏற்பட்டது. மாலையில் மிதமான தூறலுடன் கூடிய மழைய பெய்தது. சற்று நேரம் பெய்து நின்ற மழை மீண்டும் இரவில் மிதமான மழையாக தொடங்கி கனமழையாக வலுத்தது.
தருமபுரி, நல்லம்பள்ளி, ஒகேனக்கல் பகுதிகளில் தாழ்வான இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கத் தொடங்கியது. தருமபுரி அடுத்த பிடமனேரி பகுதியில் அமைந்துள்ள ஏரியில் ஏற்கெனவே ஓரளவு தண்ணீர் தேங்கியிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஏரி நிறைந்து உபரி நீர் விளைநிலங்களில் நுழைந்துள்ளது. ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் பலர் வயலடித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நெற்பயிர் நடவு செய்து முடித்துள்ளனர். இந்நிலையில், அந்த வயல்களில் ஏரி நீர் நுழைந்ததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் கூறியது: ஏரி நிறைந்த பின்னர் வெளியேறும் உபரி நீர், தாழ்வான பகுதியிலுள்ள மற்றொரு ஏரியை நோக்கி செல்லும் கால்வாயில் புதர் அகற்றப்படாமல் கிடப்பதால் தண்ணீர் செல்ல முடியவில்லை. எனவே, மிக கனமழை பெய்த நிலையில் ஏரி நிறைந்து வெளியேறிய தண்ணீர் முழுவதும் வயல்களில் நுழைந்து செல்கிறது. நடவு செய்து சில நாட்களே ஆன நெற்பயிர்களை இவ்வாறு தண்ணீர் மூழ்கடித்தபடி செல்வதால் இந்த பயிர்கள் அழுகி சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவழித்து நெற்பயிர் நடவு செய்துள்ளோம். இப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அண்மையில் தான் நெற்பயிர் நடவு முடித்துள்ளோம். இந்த வயல்கள் அனைத்தும் சேதமடைந்து விடும். எனவே, ஏரியில் இருந்து உபரி நீர் முறையாக கால்வாயில் செல்லும் வகையில் உடனடியாக கால்வாயை தூர்வார வேண்டும். அதேபோல, பாதிக்கப்பட்ட வயல்களை கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
அரூர் பகுதியில் கனமழை: இதுபோல, பொம்மிடி, அரூர், தீர்த்தமலைப் பகுதியில் காற்றுடன் பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்);
மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக தருமபுரி பகுதியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவானது. அரூர் 37, மொரப்பூர் 26, நல்லம்பள்ளி 21, ஒகேனக்கல் 20, பாலக்கோடு 11, சர்க்கரை ஆலை 10, தீர்த்தமலை 7, பென்னாகரம் 4, பாப்பிரெட்டிப்பட்டி 3.2 மிமீ மழை பதிவானது.
சூறைக்காற்றால் பசுமைக் குடில் சேதம்: காரிமங்கலம் வட்டம் திண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட உச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி செந்தில். இவர் ரூ.38 லட்சம் வங்கிக் கடன் பெற்று பசுமைக் குடில் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். இதில், 1 ஏக்கர் பரப்பில் தக்காளி நடவு செய்து பராமரித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு பெய்த மழையின்போது சூறைக்காற்று வீசியதால் இந்த பசுமைக் குடில் முழுமையாக சரிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து செந்தில் கூறும்போது, அண்மையில் தக்காளி அதிக விலைக்கு விற்ற நிலையில் ஒரு நாற்று ரூ.10 என்ற விலையில் வாங்கி பயிரிட்டேன். சில வாரத்தில் தக்காளி அறுவடைக்கு வரவிருந்த நிலையில் மொத்த வயல் மீதும் குடில் சரிந்து விழுந்துள்ளது. குடில் சேதம் மற்றும் பயிர்ச் சேதம் மூலம் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளேன். இதுபோல மேலும் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளை காக்கும் வகையில் அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.