நாம் படித்துவிடக் கூடாது என்பதில் "சனாதனம்" குறியாக இருக்கிறது.. மோடியை தாக்கிய உதயநிதி..

சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை குலக்கல்வி திட்டம் என்று விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் படித்துவிடக் கூடாது என்பதில் சனாதனம் உறுதியாக இருக்கிறது என்று கூறினார்.

மத்திய அரசு அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதனிடையே, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாள் முதலாகவே இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குலக்கல்வி திட்டத்தை தான் வேறு பெயரில் மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதாக பல கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில் ஒன்றிய அரசு ஒரு பயங்கர சதித் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளது. விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் அந்த சதித்திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வேறு ஒன்றும் அல்ல. குலக்கல்வி திட்டம்தான் இது. 1953-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) இந்தத் திட்டத்தை இங்கே கொண்டு வந்தார். அன்றைக்கு தந்தை பெரியார் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். இந்தப் போராட்டங்களால் தான் ராஜகோபாலாச்சாரி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதன் பிறகு முதலைமைச்சரான காமராஜர் அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். இன்றைக்கு காமராஜர் பெயரில் உள்ள இந்த அரங்கத்தில் இருந்து நான் உறுதியாக சொல்கிறேன். ஒன்றிய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜகோபாலாச்சாரி முதல்வர் பதவியில் இருந்து விலகினாரோ, அதேபோல விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைவார்.

நம்ம குழந்தைகளை படிக்க வைப்பதற்காக திமுக யோசித்து யோசித்து திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால், ஃபாசிஸ்டுகள் நம்ம குழந்தைகளை படிக்க விடாமல் செய்ய என்னென்ன வழி என்று யோசித்து, அதற்கான திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஏன் தெரியுமா? நாம் எல்லாம் படித்துவிடக் கூடாது என்பதுதான் சனாதனக் கொள்கை. அதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் நீட் தேர்வு. உலக அளவில் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருந்த தமிழகத்தை, மருத்துவர்களே இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.