ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டர் தூரம் வரை நகர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.
ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து, விஞ்ஞானிகள் மத்தியில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசும்போது, ‘‘இஸ்ரோவின் தொடர் சாதனைகளை உலகமே உற்று நோக்குகிறது. இது இந்தியாவுக்கு உத்வேகமான தருணமாகும். இதற்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்திய விண்வெளி ஆய்வு பணிகளுக்குத் தொடர்ந்து அவர் ஊக்கம் அளித்து வருகிறார். அதன் பலனாகவே இத்தகைய வெற்றிகளை நாம் பெற்றுவருகிறோம். ஆதித்யா எல்-1 திட்டத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த 25 ஆண்டுகளிலும், உலக அரங்கிலும் முதன்மை நாடாக இந்திய உருவெடுக்கும்’’ என்றார்.
100 மீட்டர் நகர்ந்த ரோவர்: தொடர்ந்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பேசியதாவது: ஆதித்யா விண்கலத்தை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக முதன்முறையாக பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி நிலையான பிஎஸ்-4 இயந்திரம் இருமுறை நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. அதாவது, முதலில் 313 கி.மீ தொலைவிலான புவிவட்டப்பாதைக்கு ராக்கெட் செலுத்தப்பட்டு, அங்கிருந்து திட்டமிட்ட இலக்கை அடைவதற்காக 217 கி.மீ ஆக அதன் உயரத்துக்கு குறைக்கப்பட்டது. இதற்காக இருமுறை இயந்திரம் நிறுத்தி இயக்கப்பட்டது. தற்போது குறைந்தபட்சம் 235 கி.மீ தொலைவும், அதிகபட்சம் 19,500 கி.மீ தொலைவும் கொண்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் உந்தி தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 125 நாட்கள் பயணத்துக்கு பின்னர் ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை அடைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் சாதனங்கள் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ரோவர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டர் தூரம் வரைநகர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. நிலவில் விரைவில் இரவு தொடங்க உள்ளதால், அடுத்த ஓரிரு நாட்களில் இவ்விரு கலன்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆதித்யா திட்ட இயக்குநர் நிகர் சாஜி பேசும்போது, ‘‘சூரியனை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.
ஆதித்யா விண்கலம் செயல்படத் தொடங்கினால், சூரிய ஆராய்ச்சி மற்றும் அதுசார்ந்த தகவல்களை இந்தியாவும், உலக நாடுகளும் அறிந்துகொள்வதற்கான களஞ்சியமாக இது அமையும்’’ என்றார்.
நேரில் கண்டுகளிப்பு: பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஏவுதல் நிகழ்வை, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள பார்வையாளர்கள் கேலரியில் இருந்தபடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் குடும்பத்தினருடன் ராக்கெட் ஏவுதல் நிகழ்வை நேரில் கண்டுகளித்தனர்.